RSS

உகாண்டாவில் செங்கண்ணனும் பின்னே ஞானும் ….!

14 Oct

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் உகாண்டாவில் பாதுகாப்பு நிலவரங்களில் சிறிது முன்னேற்றம் புதிய அரசின் செயல்பாட்டால் ஏற்பட்டாலும் கொலையும் கொள்ளையும் சர்வசாதாரணமாகவே நடந்துவந்தது. அதிலும் வெளிநாட்டவரென்றால் சற்று முனைப்பாகவே கொள்ளையர்கள் கவனம் செலுத்துவர்.
அந்த போதாத காலகட்டத்தில், எனது வாகன ஓட்டுநராகவும் கூடவே காப்பாளனாகவும் இருந்தவர்தான் இந்த பதிவின் நாயகன் வமாயி. மேலும் நல்ல ஒரு மெக்கானிக்காகவும் இருந்தார். எங்கள் இருவருக்கும் ஏறக்குறைய ஒரேவயது என்றே நினைக்கிறேன். நல்ல வாட்டசாட்டமான உடலமைப்பு உயரம் ஆறரை அடிகள் எனது உயரம் 5.4 தான். உள்ளூர்வாசிகளுக்கே அவரைப்பார்த்தால் ஒரு பயம்கலந்த மரியாதை தானாகவே வரும். பார்வையாலேயே நோண்டி நொங்கு எடுக்கும் கலையை அறிந்தவர். பார்வையில் அத்தனைக் கூர்மை போதாததற்கு கண்கள் இரண்டும் 24 x 7 செக்கச்செவேல் என்றே இருக்கும்.
நயமான ஆங்கிலத்தில் பணிவான பேச்சுக்கு சொந்தக்காரன். எங்கள் இருவருக்குமே கிழக்கு ஆப்பிரிக்காவின் பொதுமொழியான கிசுவஹிலி தெரிந்திருந்தாலும் ஆங்கிலத்தில் உரையாடுவதையே வழக்கமாக கொண்டிருந்தோம்.
காலையில் அலுவலகத்திற்கு வந்து இரவு வீடு திரும்பும்வரை எனது எல்லா போக்குவரவுகளையும் அறிந்தவர். எங்கள் குழுமத்தின் விற்பனைத்துறையின் தலைமைப்பொறுப்பில் இருந்ததால் அதிகநேரமும் வாகனத்தில் பயணிக்கும்படியாகவே அலுவல் இருக்கும். உகாண்டாவின் அனைத்து நகரங்களுக்கும் வமாயி வாகனம் செலுத்த நான் போய்வந்திருக்கிறேன். எனது பழக்க வழக்கத்தின் காரணமாகவும் சரிசமமாக அவரையும் பாவிக்கும் குணத்தினாலும் எங்களிடையே நல்ல ஒரு புரிதல் இருந்தது. எனது அந்த காலகட்டத்தில் சிறுவயது குழந்தைகளை பள்ளிக்கு கொண்டுவிடுதலும் மாலையில் வீட்டுக்கு கொண்டு சேர்ப்பதும் கூட அவரது வேலைதான். எனது குழந்தைகளுடன் மிகவும் அன்பாக பழகும் அவரை வமாயி அங்கிள் என்றே அழைக்கவும் செய்தனர்.
இத்தனைக்கும் என்னுடன் பணியிலிருந்த சகஇந்தியர்கள் எங்களை ஆச்சரியமாகவே பார்ப்பார். மிகவும் நெருங்கிய சிலர் ‘இந்த குடிகார டிரைவரோடு எப்படித்தான் வேலைவாங்குகிறாயோ அவனது கண்ணைப் பார் குடித்து சிவந்துபோய் இருக்கிறது’ என்று சொல்லியும் இருக்கிறார்கள். புறத்தே இருந்து பார்ப்பவர்களுக்கு அகம் தெரிய வாய்ப்பில்லை அல்லவா ?
அவர்களின் ஐயப்பாட்டிலும் நியாயம் இருக்கத்தான் செய்தது ஏனென்றால் நாட்டில் நடக்கும் கொள்ளையோ கொலையோ நம்மோடு சேர்ந்திருக்கும் உள்ளூர்வாசிகள் தொடர்பு இல்லாமல் நடக்க வாய்ப்பே இல்லை, அப்படியாகவே நடந்த 90% அசம்பாவிதங்கங்களும் நடந்துள்ளது. இறைவனின் அருளால் வமாயியுடன் இருந்த காலத்தில் எந்தவிதமான அசம்பாவிதமும் ஏற்பட்டதில்லை.
வமாயியின் எழுவருட சாரதிப்பணியில் உருவமும் தோற்றமும் குணநலனையும் அறிந்த நான் அவரை எங்கள் குழுமத்தில் பாதுகாப்பு துறையின் துணைத் தலைவனாக்கி அழகுபார்த்தேன். பாதுகாப்பு துறையின் தலைமைப் பொறுப்பும் அப்போது என்னிடமே இருந்தது. இப்போது வமாயி வேறொரு பெரிய கம்பெனியில் வேலையில் தொடர்ந்தாலும் எங்கள் நட்பு தொடர்பில்தான் இருக்கிறது. அவ்வப்போது நான் ஊரிலிருந்து கொண்டுவந்து கொடுத்த மாட்டிவாழைக்கன்றுகள் அவரது தோட்டத்தில் குலைதள்ளும்போது கொண்டுவந்து தருவதில் அன்பின் நிலைப்படும் இருக்கிறது.
அதுசரி, ஏன் இதற்கு இவ்வளவு பெரிய கதை சொல்லவேண்டும் ?
சொல்லிவிடுகிறேன்…..
நேற்று எனது தற்போதைய சாரதியோடு பயணத்தினிடையே அளவளாவிக்கொண்டிருக்கும்போது வமாயியைப் பற்றிய பேச்சு எழுந்தது அவரது செங்கண்ணைப் பற்றிய சந்தேகமும் அவிழ்ந்தது.
அதாவது வமாயியின் இனத்தவர்கள் உகாண்டாவில் கிழக்கே கென்யா நாட்டின் எல்லை பகுதியிலுள்ள மலைப் பிரதேசத்து மக்கள். தினமும் அவர்கள் மையில் கணக்காக மலையில் ஏறியிறங்க வேண்டியிருக்கும் அதற்கு நல்ல எல்லுரம் (சக்தியான எலும்புகள் ) வேண்டும். அதை பெறுவதற்காக அவர்கள் இங்குள்ள பழைய எரிமலைகள் குளிர்ந்து ஏரியாக மாறி இருக்கின்றன அவற்றில் சிலவற்றில் உப்புப்படிமங்கள் உண்டாகும் (Lake Salt) அந்த உப்பின் கரைசலை (அதில் பல்வகையான இயற்கை தாது உப்புகள், கனிம உலோகங்கள் கலந்தே இருக்கலாம் ) எலும்புகள் பலம் பெறுவதற்காக தினமும் இரண்டு மூன்று முறை அருந்துவதால் அவர்கள் அனைவருக்குமே கண்கள் செக்கச்செவேலென எப்போதுமே சிவந்துதான் இருக்குமாம்.
மனிதன் தனக்கு வேண்டிய எல்லாவற்றையும் தன்னை சுற்றி இருக்கும் இயற்கையினிடத்தில் இருந்தே பெற்றுக் கொள்கிறான். கருணையாளன் இறைவன் மனிதனுக்கு வேண்டியவை யாவையும் அவனுக்கு அருகிலேயே கிடைக்கும்படி அமைத்துக் கொடுத்திருக்கிறான்.
நான் காணும் உகாண்டா ….!
தொடரலாம்.

1915784_1752216725002117_6437085887224788060_n
ராஜா வாவுபிள்ளை
Advertisements
 
Leave a comment

Posted by on October 14, 2016 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: