RSS

தீர்வு நம்மிடம் இருக்கிறது, எளிமையானதும் கூட.. செய்யத்தான் நமக்கு மனமில்லை…

22 Nov
Priya Thambi

வீட்டுப் பக்கத்தில் ஒரு வீட்டில் இரு குழந்தைகள். மூத்த சிறுமிக்கு எட்டு வயது, இரண்டாவது பையனுக்கு இரண்டு வயது.. அந்தக் குட்டிப் பையனின் பிடித்தமான விளையாட்டே அக்காவை அடிப்பது தான். கையில் கிடைப்பதை எல்லாம் எடுத்து அடிப்பான்.. அவனின் அம்மாவிற்கு பெருமிதம் தாங்காது.. அந்தப் பையன் தவறி கீழே விழுந்தால், அழுதால், தனியாக விளையாடினால் எல்லாவற்றிற்கும் அந்த சிறுமி திட்டு வாங்கிக் கொண்டிருப்பாள்..
அந்த வீட்டில் வளரும் இரு குழந்தைகளும் மிக எளிதாக ஒன்றை புரிந்து கொள்வார்கள்.. ஒரு ஆண் அவனுக்கு இங்கே என்ன கேட்டாலும் கிடைக்கும்… அவனுக்கு பெண்ணை அடிக்கவோ, மிரட்டவோ உரிமை உண்டு.. பெண்ணுக்கு தன் உணர்வுகளை வெளிப்படுத்த உரிமையில்லை, தன்னை விட இளைய ஆணாய் இருந்தாலும் அவனுக்கு அவள் பணிந்து தான் போயாக வேண்டும்… இத்தனைக்கும் அந்தக் குழந்தைகளின் அம்மா படித்த, மேல்நிலைப்பள்ளி ஆசிரியை…
சாலிகிராமத்தில் தோழி சந்திரா வசிப்பது ஒரு ஹைடெக் அப்பார்ட்மெண்டில்… கடந்த மாதம் அங்கு சென்றபோது, லிஃப்டில் ஒரு பாட்டியும், பேத்தியும் உடன் வந்தார்கள். அந்த சிறுமிக்கு ஏழு வயதே இருக்கும். எதோ வாங்கிக்கேட்டு அடம் பிடித்ததின் மிச்சமாக சிணுங்கிக் கொண்டே இருந்தாள். டக்கென அந்தப் பாட்டி சிறுமியின் வாயில் ஒரு அடி வைத்தார். ‘’பொம்பளைப் பிள்ள இப்படி எல்லாத்துக்கும் அழுதா, நாளைக்கு கட்டிக்குடுக்கற வீட்ல, அவன் எல்லாம் வாங்கிக் குடுப்பானா?’’…..
சில மாதங்களுக்கு முன்பு, நான் ஊரில் இருந்தபோது.. எதிர்வீட்டு குட்டிப்பையன் ஏழோ, எட்டோ வயது.. பள்ளியில் இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்திருக்கிறான்… மீண்டும் பள்ளி சென்றபோது, பாடங்களை எழுதித்தரச் சொல்லி சக மாணவியிடம் கேட்டிருக்கிறான். அந்த சிறுமி மறுத்திருக்கிறாள். இடைவேளையில் அந்த சிறுமி கழிவறைக்கு செல்லும்போது, ஜட்டியை கழட்டி வெளியே வைத்து விட்டு சென்றிருக்கிறாள். அதை எடுத்து கையில் வைத்துக் கொண்டு பாடங்களை எழுதித்தரவில்லை எனில், இதை வாட்ஸப்பில் எல்லோருக்கும் அனுப்பி விடுவேன் என சிறுவன் மிரட்ட, அவள் எழுதித் தந்திருக்கிறாள்…
சிறுமி இதை ஒருவாரம் கழித்து தன் வீட்டில் பயந்தபடி சொல்ல, அவள் பெற்றோர் மூலம் பள்ளிக்குத் தெரிந்து, பள்ளி சிறுவனின் பெற்றோரிடம் சொல்லியிருக்கிறார்கள்.. இதைக்கேட்டு, அந்த அம்மாவிற்கு சின்ன பதற்றம் கூட இல்லை.. ‘’இந்த வயசிலேயே வாட்சப் தெரியுது பாருங்களேன்’’ என பீற்றிக் கொண்டிருந்தார்… நிறுத்தமுடியாத சிரிப்பு வேறு…
இந்த சிறுவன் பதினெட்டு வயதில் இப்படியே இருந்தால்? தவறு யார் மீது? பெண்கள் மீதான வன்முறைகள் மிக அதிகம் நடந்து கொண்டிருக்கிற காலகட்டம் இது… வன்முறைக்கு எதிர்வினை ஆற்றாமல்… பிரச்னையின் ஆணிவேரான பிள்ளைகளின் சரியான வளர்ப்பை பற்றி எப்போது பேசப் போகிறோம்? குழந்தை வளர்ப்பு என்பது ஆண், பெண் இருவரும் சேர்ந்து செய்ய வேண்டியது.. ஆனால் துரதிருஷ்டவசமாக, இங்கே பெண்கள் தான் அந்தப் பொறுப்பை சுமக்க வேண்டியிருக்கிறது…
ஒவ்வொரு பெண் மீதான வன்முறைக்கும், சம்பந்தப்பட்ட ஆணை சரியாக வழிநடத்தாத குடும்பம் பின்னுள்ளது என்பதை முதலில் ஒப்புக்கொண்டாக வேண்டும். ‘’நீ ஆம்புளைடா’’ என ஆண் குழந்தையின் ஜட்டியை கழட்டி விட்டு முத்தமிடும் அம்மாக்கள் நம் ஊரைத் தவிர உலகில் எங்காவது இருப்பார்களா என தெரியவில்லை… ‘’இதுக்கே நான் நூறு பவுன் கேப்பேன்’’ என ஒரு அம்மா கையில் பிடித்து ஆட்டிக் கொண்டிருந்தது தன் மகனின் ஆண் உறுப்பை.. குழந்தைக்கு ஆறுமாதமே இருக்கும். இப்படி ஒரு கண்றாவியை நாகர்கோயிலில் கடந்த ஏப்ரலில் தான் பார்த்தேன். எவ்வளவு சிறந்த குழந்தை வளர்ப்பு? இந்தப் பையன் வளர்ந்து அந்த ஆண் உறுப்பை பெருமிதமாக எங்காவது நுழைத்தால் யார் தவறு அது?
ஆண் திமிரையும், பெண் அடிமைத்தனத்தையும் பிள்ளைகள் எப்படி பள்ளியில் கற்றுக் கொடுக்கிறார்கள் என்பதை எழுத ஆரம்பித்தால் அதுதனியாக நீண்டுகொண்டே போகும்.. தன் பெண் குழந்தையை சுயமரியாதையை கற்றுக் கொடுக்காமல் அடிமையாக வளர்க்கும் பெற்றோர்… ஆண் என்பதால் தனி கொம்பு முளைத்திருப்பதாக சொல்லி, சொல்லியே பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர்… நீ ஆம்பிளை சிங்கம்டா, ஆம்பளைன்னா திமிரா இருக்கணும்டா என சொல்லி வளர்க்கும் பெற்றோர்… ஆம்பளைன்னா அப்படி, இப்படித்தான் இருப்பான், நாம தான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி இருக்கணும் என்போர்.. என குழந்தை வளர்ப்பை சிதைத்து சின்னாபின்னமாக்கி தனித்தனியாக ஆணையும், பெண்ணையும் வளர்த்து பொதுவில் மோதவிடும் அனைவருமே தான்.. நவீனாவுக்கு, கலைச்செல்விக்கு, ஸ்வாதிக்கு, நிர்பயாவுக்கு.. இன்னும் இன்னும் பெண்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும்…
தீர்வு நம்மிடம் இருக்கிறது, எளிமையானதும் கூட.. செய்யத்தான் நமக்கு மனமில்லை…

Priya Thambi
 
Leave a comment

Posted by on November 22, 2016 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: