RSS

தருணங்களின் தலைவர். . . ! / Hilal Musthafa

03 Dec

தமிழகத்தில் முஸ்லிம் லீகர்களுக்கு காலகாலமாகப் பொங்கிக் கொண்டிருந்த ஆதங்கம் நீடித்துக் கொண்டே இருந்தது.
முஸ்லிம்களுக்கு என்று ஒரு கலைக் கல்லூரி தமிழகத்தில் எங்குமே இல்லை. இதற்கு ஒரு ஏற்பாட்டைச் செய்தாக வேண்டும் என்ற இந்த எண்ணம்,காயிதெ மில்லத்தின் ஆழ்மனதில் தீவிரமாக உறுத்திக் கொண்டே இருந்தது.
அதற்கான செயல் வடிவம்தான் சென்னை ராயப்பேட்டை, பீட்டர்ஸ் ரோட்டில் உள்ள புதுக் கல்லூரி. ஆரம்பத்தில் ஓலைக் குடிசையில் தொடங்கிய கல்லூரி. அதனைத் தொடர்ந்து வரிசையாகக் கல்லூரிகள் அணிவகுத்தன.
திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி, உத்தம பாளையம் கருத்தா ராவுத்தர் கல்லூரி இப்படி இஸ்லாமியர்கள் கல்வி நிறுவனங்கள் தோன்ற ஆரம்பித்தன.இந்தப் பென்னம்பெரிய அரிய செயலுக்கு வித்திட்டவர் காயிதெ மில்லத்தான்.
காயிதெ மில்லத் மரணத்திற்குப் பின்னர் லீகர்களுக்கு இந்த ஆதங்கம் மேலும் வலுப்பெற்றது.
சிறுபான்மையினர் கல்விக்கு வித்தூன்றிவர் காயிதெ மில்லத்.
சுதந்திரப் போராட்ட வீரர்.அம்பேத்கர் தலைமை தாங்கிய இந்திய அரசியல் அமைப்புச் சட்டக் குழு உறுப்பினர். அரசியல் வாழ்வில் அப்பழுக்கற்றவர். இந்திய ஆட்சி மொழியாகும் அருகதைத் தமிழுக்குத்தான் இருக்கிறது என நாடாளுமன்றத்தில் பேசியவர். இந்திய முஸ்லிம்களின் நம்பிக்கை நட்சத்திரம்.
இந்த நியாயத்தின் அடிப்படையில் தமிழக அரசு, தமிழகத்தில் பிறந்து வளர்ந்த காயிதெ மில்லத் பெயரில் ஒரு கல்லூரியை அரசு துவக்க வேண்டும்.இதுதான் லீகர்களின் ஆழ்மன ஆதங்கம்.
அப்போது திமுக ஆட்சி காலம். முஸ்லிம்களின் பெரும்பான்மை ஆதரவால் தி.மு.க. ஆட்சியில் அமர்ந்திருந்த காலம்.
முஸ்லிம் லீக், தி.மு.க. அரசிடம் தொடர்ந்து இக்கோரிக்கையை வைத்து வந்தது.
இறுதியில் கருணாநிதி தலைமையில் இயங்கித் தமிழக அரசு ஒப்புக் கொண்டு சென்னையில் ஒரு கல்லூரிக்குப் பெயர் வைத்தது.
சென்னையில் மவுண்ட் ரோடு என அறியப்பட்டு வந்த அண்ணா சாலை அரசினர் பெண்கள் கல்லூரிக்குக் காயிதெ மில்லத் பெயரைச் சூட்டியது.
கருணாநிதி இச்செயலால் பெருமைப் பட்டுக்கொண்டார்.ஆனாலும் லீகர்களின் அதிர்ப்தி முழுதும் நீங்கி விடவில்லை.
அந்த அரசுப் பெண்கள் கல்லூரி முன்பிருந்தே முஹமதன் கல்லூரி என்ற பெயரில்தான் இயங்கி வந்தது. இந்தப் பெயரை மாற்றிக் காயிதே மில்லத் பெயரை வைத்தது.
ஒரு முஸ்லிம் பெயர் தாங்கிய கல்லூரின் பெயரை மாற்றி மற்றொரு முஸ்லிம் தலைவர் பெயர் சூட்டுவது நியாயத்தின் பாற்பட்டதன்று.
பதிய கல்லூரிக்குப் பெயர் சூட்டுங்கள் என்றால் இருந்த பெயரை மாற்றிக் கண்ணாம்பூச்சி ஆடிவிட்டது.
மாநிலத் தலைவராக அப்துல் வஹாப் ஜானி சாஹிபும், பொதுச் செயலாளராக ஏ . கே.ரிபாய் சாஹிபும் இருந்த காலகட்டத்தில் மாநில லீக் செயற்குழு கூடி ஒரு தீர்மானம் நிறைவேற்றியது.
தமிழக முஸ்லிம்களுக்கு என முஸ்லிம அமைப்புகளால் தொடங்கப்பட்ட
முதல் கல்லூரி சென்னைப் புதுக் கல்லூரி. இதற்கு அடித்தளமாக இருந்தது காயிதெ மில்லத் எண்ணமும், கடும் உழைப்பும், துஆ வும்தான்.
எனவே, அப்போதையப் புதுக்கல்லூரி நிர்வாகத்திடம் புதுக் கல்லூரியைக் காயிதெ மில்லத் கல்லூரியெனப் பெயர் மாற்றம் செய்ய கோரிக்கை வைத்துத் தீர்மானம் நிறைவேற்றியது.
அப்போது மாநில செயற்குழுவில் நான்கு எம்.பி. க்கள் இருந்தனர். அப்துஸ் ஸமது சாஹிப், ஏ.கே. ரிபாய் சாஹிப், எஸ்.ஏ.காஜா முஹையதீன் சாஹிப், இவர்கள் மாநிலங்களவை உறுப்பினர்கள். மதுரை ஷரீப் சாஹிப் மக்களவை உறுப்பினர். காயிதெ மில்லத் பெயர் கேட்டுத் தீர்மானம் நிறைவேற்றிய அந்தச் செயற்குழுவில் இவர்களும் கையொப்பமிட்டிருந்தனர்.
தீர்மானம் புதுக் கல்லூரி நிருவாகத்திற்கு அனுப்பப்பட்டது. இந்தத் தீர்மானத்தை விவாதிக்கப் புதுக் கல்லூரி நிருவாகம் செயற்குழுவைக் கூட்டியது.
புதுக் கல்லூரி நிர்வாகக் குழுத் தலைவர் அப்போது அப்துஸ் ஸமது சாஹிப்தான். கல்லூரிச் செயற்குழு உறுப்பினர்களுள் ஒருவராக எஸ்.ஏ. காஜா முஹையதீன் சாஹிபும் இருந்தார்.
புது கல்லூரியின் நிருவாகத்தில் இவ்விரும் எவ்வளவு வலியுறுத்தியும்
பெரும் பான்மை நிருவாகக் குழுவினர் காயிதெ மில்லத் பெயர் மாற்றத்துக்குச் சம்மதிக்க மறுத்துவிட்டனர். அதனால் காயிதெ மில்லத் பெயரை வைக்க இயலாது எனத் தீர்மானம் நிறைவேற்றி லீக் அலுவலகத்திற்கு அனுப்பி விட்டனர்.
லீகர்களுக்குச் சற்றுக் கோபம் அதிகரித்தது. ஆனாலும் என்ன செய்து விட முடியும்.
அப்துல் வஹாப் ஜானி சாஹிப், ரிபாய் சாஹிப், மியான்கான் சாஹிப், எம்.ஏ. லத்தீப் சாஹிப், கோதர்மைதீன் சாஹிப், தென்காசி ஷாகுல் ஹமீது சாஹிப், மெக்கோ பக்கீர் மைதீன் சாஹிப் இப்படி லீகர்கள் ஒன்று கூடி தமிழக முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து காயிதெ மில்லத் பெயரில் ஒரு கல்லூரி துவங்க அரசு இடம் ஒதுக்கித் தாருங்கள் எனக் கோரிக்கை வைத்தனர். சில வற்புறுத்தல்களுக்கும் போராட்டங்களுக்கும் பின்னர் தமிழக அரசு இதற்கான வழிவகை செய்தது.
இன்று, சென்னை மேடவாக்கத்தில் உள்ள காயிதெ மில்லத் ஆண்கள் கல்லூரி இருக்கும் இடத்தை தமிழக அரசு ஒதுக்கித் தந்தது.
அநத இடத்தில் கல்லூரிக் கட்டிடங்கள் கட்ட ,தமிழகமெங்கும் மற்றும் மலேசியா , சிங்கப்பூர் போன்ற வெளி நாடுகளுக்கும் சென்று இக்குழுவினர் முஸ்லிம்களிடம் கையேந்தி வசூல் செய்தனர்.
கல்லூரித் தாளளாராக எவரை நியமிப்பதென்று அடுத்த கட்டத்தில் விவாதிக்க ஆரம்பித்தனர்.
ஏக மனதாக காயிதெ மில்லத் மகனார் மியான்கான் சாஹிபைத் தேர்ந்தெடுப்பதென முடிவு செய்தனர்.
எவ்வளவோ வலியுறுத்தியும் மியான்கான் சாஹிப் தாளாளர் பொறுப்பை ஏற்க மறுத்து விட்டார்.
அப்துல் வஹாப் ஜானி சாஹிப் உள்ளிட்டவர்கள் அடுத்து ஏ.கே. ரிபாய் சாஹிபை வலியுறுத்தினர். அவரும் மியான்கான் சாஹிப் போலவே முழு மூச்சோடு மறுத்து விட்டார்.அந்தக் குழுவில் மூன்றாம் கட்டத் தலைவராக இருந்த லத்தீப் சாஹிப் பெயரை ரிபாய் சாஹிபும், மியான்கான் சாஹிபும்
முன் மொழிந்தார்கள். லத்தீப் சாஹிப் ஒப்புக் கொண்டு ஏற்றுக் கொண்டார்.
லத்தீப் சாஹிபிற்கு இப்படி ஒரு தருணம் தட்டேந்தி வந்து பதவி தந்தது.
தருணங்களைச் சரியாகவும் தெளிவாகவும் பயன்படுத்தத் தெரிந்தவர் எம்.ஏ.அப்துல் லத்தீப் சாஹிப்.
இந்த மூன்றாவது தருணம்தான் லத்தீப் சாஹிபை முதல் கட்டத் தலைவராக உச்சத்திற்குக் கொண்டு வநதது.
இந்த உச்ச கட்டத்தைத் தலைவர் மரியாதை லீகைத் துண்டாடும் சக்தியாகவும் வியாபித்தது. ஏற்கனவே அவருக்குள் உறங்கிக் கிடந்த
.தி.மு. க. அனுதாபி எனும் ஒரு மறைவான மனிதன் அவரைப் பிடித்தாட்டிச்
செயற்பட வைத்தான்.
ஆனால் பிந்தைய காலக் கட்டங்களில் அதாவது அவர் மரணத்தை நெருங்கிய நேரப் பொழுதுகளில் ஆழமாக இதற்காக வருந்தினார் என்பதும் உண்மைதான். அதே நேரம் தருணங்கள் அவருக்குத் தந்த அத்தனை வாய்ப்புகளையும் விட்டு விடாம்ல் தக்க வைத்துக் கொள்ள எத்தனித்துக் கொண்டே இருந்தார்.
நான் தொடர்ந்து வரும் இந்த ஐந்தாவது பகுதியை இந்த அளவில் அவர் பற்றிய அரசியல் தகவல்களைத் தந்துவிட்டு, நிறைவு செய்து கொள்ள விருப்புகிறேன்.
அவர் தனிப்பட்ட குணத்திலிருந்து ஒரு சுவையான சம்பவத்தைச் சொல்லி அமைகிறேன்.
லத்தீப் சாஹிபிற்க சொந்தமாக ஒரு அம்பாசிடர் கார் இருந்தது. பெரும்பாலும் சென்னைக்குள் தான் அதை பயன்படுத்துவார்.
அவருக்கு ஒரு டிரைவர் இருந்தான். இளைஞன் . மணி என்று பெயர். அப்படித்தான் நினைவில் இருக்கிறது.
அவன் கார் ஓட்ட ஆரம்பித்தால் அது காராக இருக்காது. அந்தக் காலத்து நளன் ஓட்டிய தேராகத்தான் அது மாறிவிடும்.
ஒரு முறை சைதாப்பேட்டை ஆலந்தூர் ரோட்டில் உள்ள முஸ்லிம் ஜமாத்தினர் மீலாது விழா நடத்தினர்.
அந்தக் கூட்டத்தில் பேசுவதற்காக லத்தீப் சாஹிபும் கவிஞர் காசிமும் நானும் லத்தீப் சாஹிப் காரில் சைதாப்பேட்டைக்கு சென்றோம்.
டிரைவர் மணி என்னும் நள மகாராஜாதான் காரோட்டினார். புறப்படத்தான் செய்தோம் சைதைக்குப் போய் சேர்ந்துவிட்டோம்.
இரவு கூட்டம் முடிந்து 11 மணிக்கு புறப்பட்டோம்.
நந்தனத்தை தாண்டும் போது லத்தீப் சாஹிபிற்கே பயம் பற்றிக் கொண்டது. அதை உணரும் முன்பே அண்ணா மேம்பாலத்தில் வண்டி ஏற ஆரம்பித்தது.
“டேய் ஹைவான் மணி வண்டியை நிறுத்துடா” என்றார் . லத்தீப் சாஹிப் கத்திய கத்தில் வண்டியை அப்படியே ஓரமாக நிறுத்தினான். அது மேம்பாலத்தின் உச்சிப் பகுதி.
“கீழே இறங்குடா. நாளைக்கு காலைல வீட்டுக்கு வந்து கணக்கை முடித்துக் கொள்” என்றார்.
இவர் கத்தின கத்தில் எங்களை அப்படியே விட்டுவிட்டு மணி இறங்கி நடந்தே போய்விட்டான்.
லத்தீப் சாஹிப் கவிஞரிடம் கூறினார் ” கவிஞரே, அவன் டிரைவராக இருந்தால் பின்னால் உட்கார்ந்து போகலாம். இஸ்ராயில் அலைஹிஸ்ஸலாமாக இருந்தால் நாம் என்ன செய்ய முடியும். அதான் கழற்றிவிட்டேன். என்ன செய்வது? அல்லாஹ் ஒரு வழி செய்வான்” என்றார்.
அரை மணி நேரத்தில் ஒரு போலீஸ் ஜீப் வந்து எங்கள் கார் அருகில் வந்து நின்றது.
லத்தீப் சாஹிபை பார்த்த உடனேயே ஜீப்பில் இருந்த காவல் துறை அதிகாரி சல்யூட் அடித்தார். செய்தியைக் கேட்டு புன்னகையுடன் ஒரு கான்ஸ்டபிளை லத்தீப் சாஹிபின் காரோடட்டியாக மாற்றி அனுப்பி வைத்தார் .
இரண்டு நாள் கழித்து லத்தீப் சாஹிப் வெளிமாவட்டங்களுக்கு சொற்பொழிவிற்கு கிளம்பிவிட்டார்.
ஒரு வாரம் கழித்து திரும்ப வருகிறார். அவர் எப்பொழுதும் நிறுத்தும் இடமான வீட்டு வாசல் தெருவோரத்தில் காரைக் காணவில்லை.
அன்று மதியம் ஆட்டோவில் மரைக்காயர் லெப்பைத் தெரு லீக் ஆபிஸுக்கு வந்தார். லீக் ஆபிஸில் நான் இருந்தேன். கவிஞருக்கு ஆள் அனுப்பி இங்கே வரச் சொல்லுங்கள் என்றார்.
“கவிஞரே செய்தி தெரியுமா? என் காரில் கடைசியாக நீங்கள் இரண்டு பேர்தான் ஏறினார்கள். அதற்குப் பின் கூட்டத்திற்கு வெளியூர் போய்விட்டேன். திரும்ப வந்து பார்த்தால் காரைக் காணவில்லை. எவனோ தள்ளிக் கொண்டு போய் விட்டான் ” என்று சாதாரணமாகச் சொன்னார்.
பாய் போலிஸில் கம்பிளைன்ட்டு பண்ணிட்டிங்களா என்று கவிஞர் கேட்டார்.
“பண்ணல, பண்ணப்போறதும் இல்லை” என்றார்.
ஏன் என்று நாங்கள் கேட்டோம்.
லத்தீப் சாஹிப் பதில் இப்படி வந்தது
“வந்தது, இருந்தது, போனது”
இதுவும் தருணத்தின் தலைவர் லத்தீப் சாஹிப் தான்.

398002_105069096342377_737277079_nHilal Musthafa
Advertisements
 
Leave a comment

Posted by on December 3, 2016 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: