RSS

சோவுக்கு அஞ்சலி

07 Dec
கே. என். சிவராமன்

சோவுக்கு அஞ்சலி
கிழக்கிந்திய கம்பெனியை தொடர்ந்து ஆங்கிலேயர்களின் ஆட்சி வலுவாக காலூன்றிய காலத்தில் மதராஸ் ராஜதானியில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்தன. அதில் முதன்மையானது மயிலாப்பூர் பிராமணர்களுக்கும் எழும்பூர் பிராமணர்களுக்கும் இடையிலான முரண்பாடு. பெரும்பாலும் இந்த சண்டை அல்லது சச்சரவில் அல்லது கருத்து மோதலில் மயிலாப்பூர் பிராமணர்களின் கையே ஓங்கி இருந்தது – அதிகார + பொருளாதார அளவில்.
இந்த இரு தரப்புக்கும் மாற்றாக உருவெடுத்த நீதிக்கட்சி, ஒரு கட்டத்துக்கு பிறகு மயிலாப்பூர் பிராமணர்களுக்கு சிம்ம சொப்பனமாக மாறியது. இதன் பிறகு மதராஸ் ராஜதானியின் வரலாறு மயிலாப்பூர் பிராமணர்கள் Vs நீதிக்கட்சி என்பதாக மாறியது. இந்திய சுதந்திரத்துக்குப் பின் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டதும் தமிழகத்தின் வரலாறு இந்த இரு கருத்தியல்களின் மோதலாகவே நிலைபெற்றது.
இந்த முன் வரலாற்றை அறியும்போதுதான் மயிலாப்பூர் பிராமணர்களின் கருத்தியல் குரலாக உருவெடுத்த ராமசாமி என்கிற சோவின் வாழ்க்கைப் பயணம் புரியும்.
தன் வாழ்நாள் முழுக்க நீதிக்கட்சியின் வழிதோன்றல்களான திராவிட கழகத்தையும், திமுகவையும் விமர்சித்தபடியே இருந்தார். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இவர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை அவர் எடுத்ததேயில்லை.
ஆனால், திமுகவில் இருந்து எம்ஜிஆர் பிரிந்து அதிமுகவை தொடங்கியதும் conditions apply என்ற அடிப்படையில் அக்கட்சியை விமர்சித்தபடியே ஆதரித்தார். இதையும் கூட திமுகவை எதிர்ப்பதற்கான ஆயுதமாகவே பயன்படுத்தினார்.
எப்போது அதிமுக மொத்தமாக ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டுக்கு வந்ததோ அப்போது conditions apply என்பதை நீக்கிவிட்டு நிபந்தனையற்ற ஆதரவை அக்கட்சிக்கு வழங்கினார்.
இந்த நிலைப்பாடுகளுக்கு எல்லாம் பின்னால் இருப்பது நீதிக்கட்சி / அதன் குழந்தையான திராவிட இயக்கங்கள் மீதுள்ள வெறுப்பு.
சோவின் சகல எழுத்துக்களிலும், பேச்சிலும் இந்த அம்சங்கள் நிரம்பி வழிவதைக் காணலாம். யாரையெல்லாம் இவர் உயர்த்திப் பிடித்தார்… எதற்காக ஆதரித்தார்… என்பதை எல்லாம் ஆராய்ந்தால் அதற்கு பின்னால் மறைந்திருக்கும் சமூக நீதிப் போராட்டங்களின் தன்மை புரியும்.
சுருக்கமாக சொல்வதென்றால் நூற்றாண்டுக்கு முந்தைய மயிலாப்பூர் பிராமணர்களின் குரலையே தன் வாழ்நாள் முழுக்க எதிரொலித்து வந்தார்.
இதனாலேயே ஒரு தரப்பு மக்கள் இவர் பின்னால் அணிவகுத்தார்கள். காரணம், அது அவர்களின் குரல் / எண்ணம்.
இதற்கு பதில் கொடுக்க திராவிட இயக்கத்தை சேர்ந்தவர்கள் அணிதிரண்டார்கள்.
இந்த சித்தாந்த போராட்டமே கடந்தகால தமிழகத்தின் வரலாறு.
பொதுத்தளத்தில் தொடங்கி பத்திரிகை / அரசியல் / பண்பாடு / கலாசாரம் / சினிமா / இலக்கியம் (சிறுபத்திரிகை + வெகுஜன இதழ்கள்)… ஏன் இப்போது சமூக வலைத்தளங்கள்… என அனைத்து இடங்களிலும் மயிலாப்பூர் – எழும்பூர் – நீதிக்கட்சி என்ற முக்கோணத்தின் போராட்டத்தைக் காணலாம். நட்பு / பகை முரண்பாடுகளின் அடிப்படையில் ஒருவருக்கொருவர் அணி சேர்வதும் விலகுவதையும் கூட.
உண்மையில் சோவின் குரல் தமிழகத்துக்கு தேவை. அப்போதுதான் சித்தாந்த ரீதியாக நம்மை நாமே உரசிப் பார்த்து தெளிவு பெற முடியும்.
மயிலாப்பூர் பிராமணர்கள் – எழும்பூர் பிராமணர்கள் – நீதிக் கட்சி என்ற முக்கோணம் இல்லையேல் தமிழகத்தில் சமூக நீதிப் போராட்டங்கள் இல்லை. நட்பு முரண்பாடு, பகை முரண்பாடு என அந்தந்த சூழலுக்கு ஏற்ப அணிகள் மாறியிருக்கின்றன. என்றாலும் சதவிகித அடிப்படையில் மயிலாப்பூர் பிராமணர்கள் பகை முரண்பாட்டையே நீதிக்கட்சியின் குழந்தைகள் விஷயத்தில் கடைப்பிடிக்கிறார்கள். 100 ஆண்டுக்கால தமிழக சரித்திரம் இதைத்தான் பதிவு செய்திருக்கிறது.
நீதிக்கட்சிக்கு இது நூற்றாண்டு. இந்த நேரத்தில் சோவின் மறைவு பல கோணங்களில் முக்கியமானது.
சோவுக்கு பிறகு யார் மயிலாப்பூர் பிராமணர்களின் குரலாக மாறுவார்கள்? நிச்சயம் தனக்கான மனிதரை அச்சமூகம் சார்ந்த கருத்தியல் தேர்வு செய்து முன்னிலைப்படுத்தும்.
அப்படி வரும் நபருக்கு சித்தாந்த அடிப்படையில் பதில் சொல்லும் அளவுக்கு திராவிட இயக்கத்தின் இன்றைய தலைமுறை வலு பெற வேண்டும்.
வாழ்நாள் முழுக்க, தான் எதிர்த்த மக்கள் திரளுக்கு முன்னால் இந்தக் கோரிக்கையைதான் / சவாலைதான் சோ முன் வைத்திருக்கிறார்.
மோடி பிரதமராக வேண்டும் என்று இந்திய அளவில் முதன் முதலில் குரல் கொடுத்த சோவின் மறைவுக்கு அஞ்சலி.

11221938_10208206897439709_1987256964633472676_nகே. என். சிவராமன்
Advertisements
 
Leave a comment

Posted by on December 7, 2016 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: