RSS

பன்னிரெண்டு ஆண்டுகளாக இதே நாளில் அந்த படபடப்பு இருந்துக்கொண்டே இருக்கிறது.

26 Dec

Yuva Krishna

2004 டிசம்பர் 1 எனக்கு நிச்சயதார்த்தம் நடந்திருந்தது. கொஞ்ச நாட்களிலேயே அப்பாவுக்கு மீண்டும் உடல் நலிவு. இருபதாம் தேதி வாக்கில் மருத்துவமனையில் சேர்த்திருந்தோம். அம்மாவும் அட்டெண்டராக அப்பாவோடு இருக்க வேண்டிய சூழல். அலுவலகத்திலும் டைட் ஒர்க். லீவும் கிடைக்காது. நாளுக்கு நாள் அப்பாவின் நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கிறது. கல்யாணம் வரை தாக்குப் பிடிப்பாரா என்று சொந்தக்காரர்களுக்கு சந்தேகம் கலந்த சோகம்.
கிறிஸ்துமஸ் அன்றும் வேலைக்குப் போய்விட்டு, அப்பாவைப் பார்த்துவிட்டு மனச்சோர்வோடு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தேன். போன் கிணுகிணுத்தது. “வானுவம்பேட்டை கடைக்கு வாடா” என்று அண்ணன் அழைத்தார். இருளடைந்த முகத்தோடு போனேன். “கல்யாண மாப்பிள்ளை. ரொம்ப டென்ஷன் ஆவக்கூடாது. ரிலாக்ஸ் ஆகணும்னுதான் இந்த பார்ட்டி” என்றார். வீட்டுக்கு எப்படி, எத்தனை மணிக்கு வந்தேன் என்றே நினைவில்லை. அடுத்த நாள் ஞாயிறு என்பதால், அலுவலகம் கிளம்பவேண்டிய பிரச்சினை இல்லை.
மறுநாள் காலை செம ஹேங்க் ஓவர். போன் அடிக்கும் சப்தம் ஏதோ கிணற்றுக்குள் இருந்து ஜென்மஜென்மமாக கேட்பதைப் போல உணர்வு. பிரயாசைப்பட்டு கண் விழித்தால் நல்ல வெளிச்சம். மணி பத்து ஆகியிருந்தது. இருபத்தெட்டு மிஸ்ட் கால். அப்போது நண்பர்கள் நிறைய பேரிடம் செல்போன் இல்லை. போன் பூத்தில் இருந்துதான் பேசுவார்கள். காஞ்சிபுரத்தில் இருந்த கார்த்திக் என்கிற நண்பர் மட்டும் அவரது செல்லில் இருந்து எட்டு முறை அழைத்திருக்கிறார். திரும்ப அழைத்தேன். “டேய், சென்னையே மூழ்கிடிச்சின்னு சொல்றாங்க. நீ வேற போனை எடுக்கலை. பயந்துட்டேண்டா” என்றார். ஒன்றும் புரியவில்லை. கதவைத்திறந்து வெளியே பார்த்தேன். ‘பளிச்’சென்றிருந்தது. மழை பெய்ததற்கான சுவடேயில்லை.
டிவி போட்டதும்தான் தெரிந்தது. ஆழிப்பேரலை. அண்ணா சமாதியருகே அம்பாஸடர் கார் ஒன்று அலையில் அடித்துவந்து ஆடிக்கொண்டிருந்த காட்சியை திரும்பத் திரும்ப ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். ராஜன் சார் வேறு குடும்பத்தோடு மகாபலிபுரம் பிக்னிக் போயிருக்கிறார். அவருக்கு என்ன ஆனதோ என்று அவரது எண்ணை முயற்சித்தேன். கிடைக்கவேயில்லை என்றதும் அச்சம் கூடுதலாகியது. கொஞ்ச நேரத்தில் அவரே லைனுக்கு வந்தார். “ஈ.சி.ஆர். ஃபுல்லா பயங்கர தண்ணி கிருஷ்ணா. கடல் கொந்தளிச்சிடிச்சி. எங்களோட வேனையே புரட்டிப்போட இருந்தது” என்றார்.
அண்ணனை அழைத்துக்கொண்டு டூவீலரில் கிளம்பினேன். தெருமுனையில் இருந்த மெஸ்ஸில் அவசர அவசரமாக உணவு பேக் செய்துக் கொண்டிருந்தார்கள். ”நிறைய பேருக்கு வீடு மூழ்கிடிச்சாம். மண்டபங்களில் தங்க வெச்சிருக்காங்களாம். பாவம் குழந்தை குட்டிகளோடு சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவாங்க?” என்றார் மெஸ்காரர்.
பட்டினப்பாக்கத்தை அடையும்போதுதான் கோராமை புரிந்தது. இதயம் தடதடத்துக்கொள்ள கலங்கரை விளக்கம் வந்து சேர்ந்தோம். மாரில் அடித்துக்கொண்டு பெண்கள் அழுகிறார்கள். ஆண்கள் கூட்டம் கூட்டமாக அப்படியும், இப்படியுமாக அலைந்துக் கொண்டிருந்தார்கள். விவேகானந்தர் நினைவு இல்ல சுவரில் ஒரு போட் அலைகளில் அடித்துவந்து அறையப்பட்டிருந்தது. பெரிய அலைகள் கடலில் தோன்றும் போதெல்லாம் “மறுபடியும் வருது” என்று கூட்டம் சாலைக்கு ஓடுவதும், மறுபடியும் கடற்கரைக்கு திரும்புவதுமாக இருந்தது.
மூன்று, நான்கு மணி வரை ஏன் எதற்கு என்று தெரியாமலேயே அப்படியும், இப்படியுமாக அலைந்துக்கொண்டு வீட்டுக்கு திரும்பினோம். படபடவென்று அடித்துக்கொண்ட இதயத்தின் வேகம் மட்டும் குறையவேயில்லை. பன்னிரெண்டு ஆண்டுகளாக இதே நாளில் அந்த படபடப்பு இருந்துக்கொண்டே இருக்கிறது.

382457_4114100457856_43654818_nYuva Krishna

Advertisements
 
Leave a comment

Posted by on December 26, 2016 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: