RSS

அறிவியல் கதிர் வில்லியம் ராம்ஸே… ஒரு தலைசிறந்த விஞ்ஞானி /பேராசிரியர் கே. ராஜு

27 Dec

வில்லியம் ராம்ஸே உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவர். 19வது நூற்றாண்டின் இறுதி ஆண்டுகள் இயற்பியல், வேதியியல் துறைகளில் பல முக்கியமான கண்டுபிடிப்புகள் வெளியிடப்பட்ட காலம். 1869-ல் ரஷ்ய விஞ்ஞானி டிமிட்ரி மெண்டலீவ் தனிம அட்டவணையை உருவாக்கியிருந்தார்; 1895-ல் ஜெர்மானிய இயற்பியலாளர் வில்ஹெம் ராண்ட்ஜன் எக்ஸ்-கதிர்களைக் கண்டுபிடித்தார்; 1896-ல் பிரான்ஸ் தேசத்தைச் சேர்ந்த வேதியியலாளர் ஹென்றி பெக்குரல் ரேடியோ கதிர்வீச்சைக் கண்டுபிடித்தார்; 1897-ல் பிரிட்டிஷ் இயற்பியலாளர் ஜெ.ஜெ. தாம்சன் எலெக்ட்ரானைக் கண்டுபிடித்தார். இந்த வரிசையில் ஸ்காட்லாந்து விஞ்ஞானி வில்லியம் ராம்ஸே 1894லிலிருந்து 1898 வரை தீவிரமான ஆராய்ச்சியில் இறங்கி தனிம அட்டவணையில் தனித்துவமான குணங்கள் கொண்ட ஒரு தனிமங்கள் குழுவையே கண்டுபிடித்துவிட்டார். அவரும் பிரிட்டிஷ் இயற்பியலாளர் லார்ட் ராலேவும் இணைந்து 1894-ல் ஆர்கான் என்ற தனிமத்தைக் கண்டுபிடித்தனர். நார்மன் லாக்யெர், எட்வர்ட் ஃபிராங்க்லண்ட் ஆகிய இருவரும் 30 ஆண்டுகளுக்கு முன்னதாக சூரிய கிரகணத்தின்போது சூரியனின் நிறப்பிரிகையில் ஹீலியம் இருப்பதைக் கண்டுபிடித்திருந்தனர். ஆனால் 1895-ல் கிளவீத்து (cleveite) தாதுவிலிருந்து ஹீலியத்தை ராம்ஸேதான் பிரித்தெடுத்தார். அது மட்டுமல்ல, ரேடியம் கதிர்வீச்சின் காரணமாக சிதைவடையும்போது ஹீலியம் தொடர்ந்து உற்பத்தியாகிறதென்றும் பிரிட்டிஷ் வேதியியலாளர் பிரெடரிக் சாடியுடன் இணைந்து ராம்ஸே கண்டுபிடித்தார். அணுக்கருவின் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ள இந்தக் கண்டுபிடிப்பு பெரிதும் துணைநின்றது. 1898-ல் பிரிட்டிஷ் வேதியியலாளர் மாரிஸ் வில்லியம் டிராவர்ஸுடன் இணைந்து நியான், கிரிப்டான், ஜெனான் ஆகிய மூன்று தனிமங்களையும் திரவமாக்கப்பட்ட காற்றிலிருந்து ராம்ஸே பிரித்தெடுத்தார். இந்த மூன்று தனிமங்களும் வேறெந்த தனிமத்துடனும் சேராத `உயர்குண வாயுக்கள் (noble gases)’ என அழைக்கப்படுகின்றன. மேற்கண்ட ஐந்து வாயுக்களும் தனிம அட்டவணையில் ஒரு புதிய குழுவாக அமைவதை ராம்ஸே சுட்டிக்காட்டினார். 1900-ல் ராடான் என்ற தனிமத்தை ஜெர்மானிய வேதியியலாளர் பிரெடரிக் ஏர்னஸ்ட் டான் கண்டுபிடித்திருந்தாலும் அதை போதுமான அளவில் தயாரித்து அது உயர்குண குடும்பத்தைச் சேர்ந்தது என்பதை ராம்ஸேதான் கண்டுபிடித்தார்.
எலெக்ட்ரான்கள் அணுக்கருவுடன் பிணைந்து அணுக்கட்டமைப்பு அமைவதற்கான அடித்தளத்தை ராம்ஸே அமைத்துக் கொடுத்தார். 1904-ம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு ராம்ஸேவுக்கு அளிக்கப்பட்டது. பிரிட்டனிலிருந்து வேதியியலுக்கான நோபல் பரிசைப் பெற்ற முதல் விஞ்ஞானி ராம்ஸேதான். அதே ஆண்டில் உயர்குண வாயுக்களை ராம்ஸே கண்டுபிடிப்பதற்கு உந்துசக்தியாக இருந்த பிரிட்டிஷ் இயற்பியலாளர் லார்ட் ராலேவுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு கிடைத்தது.
காற்றில் ஒரு சதம் இருக்கும் ஆர்கானைத் தவிர மற்ற உயர்குண வாயுக்கள் எல்லாம் மிக அரிதில் கிடைப்பவையே. ஹீலியம் பூமியில் அரிதாகக் கிடைக்கும் தனிமம். ஆனால் அண்டத்தில் ஹைட்ரஜனுக்கு அடுத்து இரண்டாவதாகக் கிடைக்கும் அளவுக்கு அதிகமாக இருப்பது ஹீலியம்தான். கிரியோஜன் என்ற குளிர்ச்சியூட்டும் பொருளாக (refrigerant) திரவ ஹீலியம் பயன்படுகிறது. ஆகக் குறைவான கொதிநிலையான -269 டிகிரி சென்டிகிரேட் உள்ள தனிமம் ஹீலியம்தான். கதிர்வீச்சுத் தன்மை கொண்ட ராடானைத் தவிர உள்ள பிற உயர்குண வாயுக்கள் பிரகாசமான ஒளியைத் தரும் குழாய் விளக்குகளில் பயன்படுத்தப்படுகின்றன.
வில்லியம் ராம்ஸே ஸ்காட்லாந்தில் கிளாஸ்கௌ என்ற இடத்தில் 1852 அக்டோபர் 2 அன்று பிறந்தார். சிறு வயதிலேயே வேதியியலில் அவருக்கு ஆர்வம் பிறந்தது. 1866-ல் பள்ளிப் படிப்பை முடித்த ராம்ஸே கிளாஸ்கௌ பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அவரது ஆரம்பநிலைப் பணி உயிரி வேதியியலில் இருந்தது. பத்தாண்டுகள் அத்துறையில் பணியாற்றிய பிறகு அவர் இயற்பியல் வேதியியலுக்கு மாறினார். அவரது பணி வெப்ப இயற்பியல் துறையில் இருந்தாலும் உயிரியல்லாத வேதியியல் துறையில்தான் அவரது பல முக்கியமான கண்டுபிடிப்புகள் இருந்தன. தனிமங்களை அவைகளது குணங்களுக்கேற்றபடி ஓர் அட்டவணையில் தொகுப்பது பற்றி விளக்கம் அளித்து வேதியியல் பாடபுத்தகங்களை முதன்முதலில் எழுதியது ராம்ஸேதான். லண்டனில் உள்ள ராயல் சொசைட்டி, லண்டன் வேதியியல் சொசைட்டி போன்ற பல புகழ்பெற்ற நிறுவனங்களில் அவர் பணியாற்றினார். 1916 ஜுலை 23 அன்று 64வது வயதில் பக்கிம்காம்ஷயரில் காலமானார்.
சலியாத உழைப்பு மட்டுமே வெற்றியைத் தரும் என்ற முன்னுதாரணத்தை இளம் தலைமுறைக்கு விட்டுச் சென்றிருக்கும் வில்லியம் ராம்ஸேயை அறிவியல் உலகம் என்றும் நினைவில் வைத்திருக்கும்.
(உதவிய கட்டுரை : டிசம்பர் 2016 ட்ரீம் 2047 இதழில் டாக்டர் சுபோத் மஹந்தி எழுதியது)

From: Raju Krishnaswamy <aasiriyan11@gmail.com>

aibeiaiaaabdcjpci8fux96zrcildmnhcmrfcghvdg8qkda5zta2zdhmm2fmotgyzmfimmzmzwuwyzqxyjllyta2nduyowy4mtywavdylilsih1o5jxa0mimdofm0sbsfrom: Muduvai Hidayath <muduvaihidayath@gmail.com>

Advertisements
 
Leave a comment

Posted by on December 27, 2016 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: