RSS

—யாவாரமெல்லாம் எப்படி இருக்கு?

30 Dec
Shahjahan R

டிசம்பர் மாதம், அதுவும் கிறிஸ்துமஸ் முடிந்த பிறகு, கூட்டமில்லாத ரயிலைப் பார்த்தது இதுவே முதல் முறை. ஊருக்குப் புறப்படுவதற்கு முந்தைய நாள்தான் டிக்கெட் பதிவு செய்தேன். 28ஆம் தேதிக்கான டிக்கெட்டை 22ஆம் தேதி மிக சாதாரணமாக பதிவு செய்ய முடிந்தபோதே மனதுக்குள் இடித்தது. அப்போதும்கூட 180 டிக்கெட்டுகள் காலியாக இருந்தன. எப்படியோ, எனக்கு டிக்கெட் கிடைத்ததே என்ற திருப்தியுடன் ஊருக்குப் போய் 28ஆம் தேதி சென்னையிலிருந்து ரயில் ஏறினேன். தில்லி-சென்னை பயணத்துக்கு மக்கள் ஜி.டி. எக்ஸ்பிரஸை அதிகம் விரும்புவதில்லை என்றாலும், ரயில் காலியாக இருப்பதில்லை. ஆனால் இந்த ரயிலில் நிறைய இடங்கள் காலியாக இருந்தன. பாதிவழி நாக்பூர் வந்த பிறகு இன்னும் பல காலி இடங்களைக் காண முடிந்தது.
சென்னையிலிருந்து புறப்பட்ட சற்று நேரத்திலேயே இழுக்கத் துவங்கியது. இரவு 7 மணிக்குப் புறப்பட்டது, ஆந்திரத்தில் நுழைந்து பத்து மணிக்குள் ஒரு மணி நேரம் தாமதமாக்கி விட்டதால், கணிசமாக தாமதமாகத்தான் தில்லி போய்ச் சேரும் என்று முடிவு செய்து கொண்டேன். எதிர்பார்த்தபடியே ஐந்தரை மணி நேர தாமதம் என்ற அறிவிப்புடன் ஆறு மணி நேர தாமதமாக வந்து சேர்ந்தேன்.
ஜிடி எக்ஸ்பிரஸ் சேர வேண்டிய நேரம் 6 – 6.30 மணி. எனவே, சமையல் பெட்டியில் ஏதும் இருக்காது. முந்தைய இரவோடு உணவு வகைகள் முடிந்து விடும், தேநீர் மட்டுமே காலையில் கிடைக்கும். ரயில் தாமதமாகி விட்டால், காலையில் சாப்பிட ஏதும் கிடைக்காது. தேநீரும்கூட சற்று நேரத்துடன் முடிந்து விடும். இப்போதும் அதுவே நடந்தது. வழியில் நின்ற இடங்களில் பிரெட் பக்கோடாவும், தேநீரும் குடித்துக்கொண்டே வந்தவனுக்கு ஆறுதலாக மதுராவைக் கடந்த பிறகு வந்தார் கடலை விற்கும் முதிய பெண்மணி ஒருவர். ஆக்ராவிலும், மதுராவிலும் பெரும்பாலான ஆட்கள் இறங்கிவிட காலிப்பெட்டியில் வியாபாரமின்றி களைத்துப்போய் அமர்ந்தவரிடம் 10 ரூபாய்க்கு கடலை வாங்கி சாப்பிட்டுக்கொண்டே வழக்கம்போல அரட்டையைத் துவங்கினேன்.
—என்னம்மா… உங்களுக்கு ஹரியாணாதானே?
—ஆமா
—எந்த ஊரு?
—மதுரா
—யாவாரமெல்லாம் எப்படி இருக்கு?
—அதான் பாக்கறியே… அப்படியே இருக்கு. (பத்து பத்து ரூபாய்க்கு பாலிதீன் பைக்குள் பிரித்துப் போட்டு வைத்திருந்த பைகளைக் காட்டினார். இன்னொரு பையில் குட்கா சாஷேக்கள்.)
—ஆமா… நோட் பந்தி (செல்லாத நோட்டு) விவகாரத்தால உங்களுக்கு லாபமா நஷ்டமா?
—லாபமா? விக்கிறதுக்கே வழியில்லாதப்ப லாபம் எங்கிருந்து வரும்?
—பின்னே நஷ்டமா?
—வேறென்ன?
—நோட் பந்தி நல்லதுன்னு சொல்றாரே மோதி?
—யாருக்கு நல்லதோ யாருக்குத் தெரியும்? என்னைய மாதிரி ஏழைங்களுக்கு நஷ்டம்தான்.
—உங்களுக்கு என்ன நஷ்டம்?
—யாவாரமே இல்லேன்னா நஷ்டமே இல்லையா?
—நாளைக்கு எவ்வளவுக்கு யாவாரம் ஆகும்?
—நானூறு-ஐநூறு ரூபாய்க்கு ஆகும்.
—அப்போ 200-250 ரூபா லாபம் கிடைக்கும் இல்லையா?
—ஊஹூம்… அதிகபட்சமா 200 ரூபா கிடைக்கும். அதுலயும் யார் யாருக்கோ குடுக்க வேண்டியதெல்லாம் போக 100-150 மிஞ்சினா பெரிய விஷயம்.
—சரி… 100-150 பெரிய விஷயம்தானே… கிராமத்துல இருக்கிறவங்களுக்கு.
—இப்போ எங்கே 100-150 கிடைக்குது? விக்கவே இல்லையே…?
—எத்தினி டிரிப் அடிப்பீங்க?
—ஒரே டிரிப்தான். மதுராவிலிருந்து வந்து நிஜாமுதீன்ல இறங்கி அடுத்த டிரெயின் புடிச்சு போயிடுவேன்.
—ஆமா… உங்ககிட்டே இருந்த பழைய நோட்டை மாத்திட்டீங்களா?
—ஹிஹிஹி… எங்கிட்டே இருந்தாதானே மாத்தறதுக்கு?
—ஒரு நோட்டுகூட இல்லையா? மாத்தப் போகவே இல்லையா?
—ஊஹூம்… அன்னாடம் சம்பாதிக்கிற காசுல அன்னாடம் பொழப்பு ஓடும். இதுல சேத்து வைக்க எங்கே போக?
—மோடி உங்களுக்கு நல்லது செய்யறேன்னு சொல்லியிருக்காரே?
—ஒரு மண்ணும் செய்யாம இருந்தா போதும். நாங்க எப்படியோ பொழச்சுக்குவோம்.
—கடலை விக்கிறீங்க, சரி. ஆனா குட்கா விக்கிறீங்களே… இது கெடுதி இல்லையா?
—நான் எப்பவும் கடலை மட்டும்தான் வித்துட்டிருந்தேன். ஒரு மாசம் ரெண்டு மாசமா யாவாரம் இல்லாமப்போக இப்போ குட்காவும் விக்கிறேன்.
வல்லரசு ஆவதற்கு இன்னும் ……!!!
பி.கு. – ரயிலில் கூட்டமே இல்லை என்பது பொய் என்று நினைப்பவர்களுக்கு கூடுதல் செய்தி – Indian Railways announce 10 per cent rebate in vacant train berths. Worried over many unoccupied seats in Mail/Express trains, railways today announced 10 per cent rebate for vacant berths after finalisation of the reservation charts from January one.

Shahjahan R

தில்லியில் வசிக்கத் துவங்கிய 1991 முதல் 26 ஆண்டுகளில் நூறு முறையேனும் தெற்கு-வடக்கு நோக்கி நெடும் பயணங்கள் மேற்கொண்டிருப்பேன்.
சன்னல்களுக்கு இடைப்பட்ட பகுதியில் சுழலும் ஆஷ் டிரே இருந்த காலம் முதல் புகைக்கத் தடை வரை எத்தனையோ மாற்றங்களைப் பார்த்தாயிற்று.

போகையிலும் வருகையிலும் ஒரு சிகரெட் கூட புகைக்காத முதல் பயணம் சற்று நேரத்தில் முடியப் போகிறது. அதுவும் கடும் குளிர் டிசம்பரில்.
ஷாஜஹான்… யூ ஆர் கிரேட். 🙂

Shahjahan R
Advertisements
 
Leave a comment

Posted by on December 30, 2016 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: