RSS

லாப நஷ்ட கணக்கு ….!

01 Jan

வருடாந்திர கணக்கு வழக்குகளை வழக்கம்போல வருட இறுதியில் வரும் ஞாயிறன்று கடையில் எப்போதும் இருக்கும் அரிபரி எதுவும் இல்லாமல் இருந்து பார்த்துக்கொண்டிருந்தார் முதலாளி.
வருடத்தில் எத்தனை முறைகள்தான் லாபநஷ்டம் பார்க்க வேண்டும் ?
அது அவருக்கு மட்டுமே வெளிச்சம். அந்தக்காலத்து எச்சில் படிந்த பேரேடுகளின் பக்கங்களை இறுக்கமான முகத்தில் இருந்த சிறுகண்களில் போட்டிருந்த பெரிய சோடாப்புட்டி கண்ணாடி வழியாக திருப்பித் திருப்பிப் பார்த்துக்கொண்டிருந்தார். பேரேட்டில் எழுதி இருந்த எண்களின் கூட்டுத் தொகையை சரியாகவே காட்டினாலும் அதில் கணக்காப்பிள்ளை எழுதியிருந்ததில் அவ்வளவாக நம்பிக்கை இல்லையோ என்னவோ ஆனால் அவரது மனக்கணக்கில் உண்மைக் கணக்கு ஒரு முழுநீள ஊமைப்படம்போல ஓடிக்கொண்டிருந்தது.
விடுமுறை நாளில் காலையிலேயே வந்து கடையின் உள்ளிருந்த அலுவலகத்தில் அமர்ந்திருந்து பேரேடுகளை பார்ப்பதும், கோப்புகளை பார்ப்பதும் அதிலிருக்கும் காகிதக் கத்தைகளில் சிலவற்றை சுக்கு நூறாக கிழிப்பதுமாக நேரம்போவதே தெரியாமல் இருந்துகொண்டிருந்தார். ஆமாம், லாபத்தை கணக்குப் பார்க்கும்போது நேரம்போவது தெரியாது தானே!
இத்தனையையும் காலையில் இருந்தே, ஞாயிறுக்கிழமை காலையில் வாரத்தில் ஒரு நாள் கொஞ்சம் கூடுதலாக தூங்கி சடைவை தீர்த்துக்கொள்ளும் அந்த கடையில் புதிதாக இரண்டு வருடங்கள் முன்னால் கிராமத்தில் இருந்து வந்து வேலைபார்க்கும் பையன் பார்த்துக்கொண்டே இருந்து காலத்தைப் போக்கினான்.
கிழவன் முதலாளி எப்போது போவான் எப்போது வீட்டிற்குபோய் சமைத்து சாப்பிட்டுவிட்டு மாட்னிசோ பார்க்கபோகலாம் என்று வாரத்தில் ஒருமுறை கிடைக்கும் பொழுதுபோக்கையே பாவம்போல நினைத்துக் கொண்டிருந்தான் கடைக்கார பையன் .
வாரநாட்களில் இடைவிடாமல் அலறும் முதலாளியின் அலுவலக தொலைபேசி இன்று விடுமுறையாதலால் அமைதியாக இருந்தது. இருந்தாலும் மதிய சாப்பாடு நேரத்தில் முதலாளியின் பெண்டாட்டி போனில் கூப்பிடமாட்டாளா என்பதை எதிர்நோக்கிபடி காத்திருந்தான்.
சரியாக பன்னிரண்டரை மணிக்கு போன்வந்தது. அதை எடுத்தவர் வாரேன் வாரேன் என்று பலதடவைகள் சொல்லிக்கொண்டே இருந்தார்.
பணமா பாசமா அங்கே படம் ஓடியது. ஒருவழியாக போனை வைத்துவிட்டு புறப்பட தயாரானார். அப்போதுதான் பார்ப்பதுபோல கடையினுள் நின்றிருந்த அந்த பையனைப் பார்த்து ‘நீ இவ்வளவு நேரமும் இங்கேயேவா இருக்கிறாய்?’ என்றபடி சாவியைக் கொடுத்து அலுவலக அறையையும் கடையையும் பூட்டச் சொன்னார்.
பூட்டிக்கொண்டிருக்கும்போதே, ‘தம்பி உனக்கு தெரியுமா கடையில் லாபம் ஒன்றும் இல்லை நட்டத்தில்தான் ஓடுகிறது. இந்த வருடத்தோடு கடையை பூட்டப்போகிறேன் நீ திருப்பி கிராமத்துக்கு போகவேண்டியதுதான்’. கழிந்த வருடமும் இதேநாளில் இப்படியே சொன்னது அவனுக்கு ஞாபகத்தில் வந்துபோனது. கூடவே கழிந்த வருடமும் வருடாந்திர விடுமுறையும் கொடுக்கவில்லை, சம்பளமும் கூட்டிக்கொடுக்கவில்லை.
பாவம் பையனுக்கு புரிந்துவிட்டது இந்த வருடத்தையும் முதலாளி புடுங்கிக் கொண்டார் என்பதை இருந்தாலும் ஒன்றும் புரியாததுபோல் முகத்தை வைத்துக் கொண்டு நின்றான். வரப்போகும் வருடங்களிலும் இதையேதான் கீறல் விழுந்த கிராமபோன் ரிக்காடுபோல முதலாளி சொல்லப்போகிறார் என்பதை தெரியாமலே. சாவியை வாங்கிக்கொண்டு காரிலேறி பறந்துவிட்டார் மதிய உணவருந்த, அடுத்தவருடத்தில் எவ்வளவு லாபம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தை அடிமனதில் ஒழித்து வைத்தபடி.
# நான் எழுதிக்கொண்டிருக்கும் ‘லாப நஷ்ட கணக்கு’ எனும் புதினத்தில் இருந்து ஒரு பாகம் நட்புகளின் வாசிப்பிற்கு விருந்தாக #

1915784_1752216725002117_6437085887224788060_n

ராஜா வாவுபிள்ளை

Advertisements
 
Leave a comment

Posted by on January 1, 2017 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: