RSS

சிந்திப்பதே ஆரோக்கியம். இறைவனின் கருணை துணை நிற்குமாக.

04 Mar

அன்பு நண்பர்களுக்கு
’குங்ஃபூ’வை நினைவுபடுத்தும் ‘ஃபெங்ஃபூ’ என்ற ஐஸ் கட்டி சிகிச்சை பற்றி ஒரு நண்பர் ஒரு பதிவை இட்டிருக்கிறார். இதுபோன்ற பதிவுகளில் உள்ள பிரச்சனை பற்றி நான் சொல்ல ஆசைப்படுகிறேன்.
உதாரணமாக வெண்டைக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள், ஆப்பிள் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள், இது சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள், அது சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் – இப்படி ஆயிரக்கணக்கான விஷயங்கள் பற்றி அன்றாடம் செய்திகள் வந்து விழுந்துகொண்டே இருக்கின்றன.
ஆரோக்கியம் மிக முக்கியமானதுதான். ஆனால் அது பற்றியே சிந்திக்கொண்டிருப்பது ஆரோக்கியக் குறைவுக்கு வழிவகுக்கும். அதுமட்டுமல்ல. நாம் எல்லோரும் மனிதர்கள்தான் என்றாலும் என் உடலைப் போன்றதல்ல உங்கள் உடல். எனக்குப் பொருந்துவது உங்களுக்குப் பொருந்தாது. உங்களுக்குப் பொருந்துவது எனக்குப் பொருந்தாது. எனவே எல்லா சிகிச்சைகளும், அது அலோபதி, ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேதா, அக்யுபஞ்சர், பாட்டி வைத்தியம், நாட்டு வைத்தியம், வர்மா, குருமா, டார்ன் சிகிச்சை, ஃபெங்ஃபூ, குங்ஃபூ எதுவாக இருந்தாலும் சரி, ஒவ்வொன்றும் ஒவ்வொருவர் உடல் நிலைக்கும் மனநிலைக்கும் தகுந்தவாறு பொருந்தும். அல்லது பொருந்தாது.
ஆரோக்கியத்தின் பின்னால் 99.99 விழுக்காடு இருப்பது நம் மனம் மட்டுமே. நம் மனம் ஏற்றுக்கொண்டால்தான் எதுவும் வேலை செய்யும். ஐஸ் கட்டியை 20 நிமிடம் என் கழுத்தின் பின்னால் வைத்தால் பிரச்சனை தீரும் என்று நான் முழுமையாக நம்பிச் செய்தால் மட்டுமே அது வேலை செய்யும். அச்சத்தோடு நான் அதைச் செய்தால் அது வேலை செய்யாது என்பது மட்டுமல்ல, பிரச்சனையை அதிகப்படுத்தவும் செய்யலாம்.
சமீபத்தில் மதுரை ஆல்ஃபா வகுப்புக்குச் சென்றபோது சகோ. யூசுஃப் மௌலானாவைச் சந்தித்தேன். அவர் டார்ன் சிகிச்சையில் நல்ல தேர்ச்சியும் முதிர்ச்சியும் பெற்றுள்ளார் என்று புரிந்துகொள்ள முடிந்தது. ஆனாலும் அவருடைய பார்வை ஒரு தலைப்பட்சமானதாகவே உள்ளது. எல்லாப் பிரச்சனைகளையும் முதுகுத்தண்டோடு முடிச்சுப்போட்டுப் பார்த்து, அந்த முடிச்சுகளை அவிழ்க்கும் விஞ்ஞானம்தான் அது. அது தவறென்று சொல்ல வரவில்லை. ஆனால் அதைச் செய்யாமல் போனால் பிரச்சனை அதிகமாகும் என்ற அவர்களது கருத்து ஒருதலைப்பட்சமானது. பரிபூரண நம்பிக்கையின் மூலம், பிரார்த்தனையின் மூலம் எல்லாவற்றையும் சரி செய்ய முடியும்.
சமீபத்தில் என் சீடர் ஒருவரின் உறவினர் ஒரு பெண் கோமாவிற்குச் சென்று மதுரை மீனாட்சி மெடிகல் மிஷன் மருத்துவமனையில் பத்து நாட்களுக்கும் மேல் இருந்தார். என்மீது கொண்ட நம்பிக்கையின் காரணமாக அவர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் நான் தொடர்ந்து அந்த சகோதரிக்காக பிரார்த்தனை செய்தேன். நிச்சயம் இறந்துபோவார் என்று சொல்லப்பட்டவர் பத்து நாட்களுக்குப் பிறகு கோமாவிலிருந்து வெளிவந்தார். எழுந்து உட்கார்ந்தார். திரவ உணவு எடுத்துக்கொண்டார். அதுமட்டுமல்ல, என் சீடரின் மனைவியிடம் நான் அந்த நோயாளி சகோதரியோடு கோமாவில் இருக்கும்போதே அவரிடம் சென்று நம்பிக்கையூட்டும் விதமாகப் பேசுங்கள் என்று கூறியிருந்தேன், அவர் அதை கர்ம சிரத்தையாகச் செய்தார். மருத்துவமனையில் இருந்த செவிலியர் எல்லாம் அதைப் பார்த்து அழுதார்களாம். கிட்டத்தட்ட இறந்த நிலையில் இருந்த ஒருவரிடம் திரைப்படங்களில் வருவது போல அவர் பேசியதைப் பார்க்க அவர்களுக்கு வினோதமாகவும் முட்டாள்தனமாகவும் இருந்திருக்கிறது.
ஆனால் கோமாவிலிருந்து வெளிவந்த அந்த நோயாளி சகோதரி, தான் கோமாவில் இருந்தபோது பேசப்பட்டதையெல்லாம் ஒப்புவித்திருக்கிறார்! கிட்டத்தட்ட அனிதா மூர்ஜானி கதை மாதிரி ஆகிவிட்டது!
அதுமட்டுமல்ல. அந்த மருத்துவமனையின் ஐசியூவுக்குச் சென்று உயிரோடு திரும்பி வந்த முதல் பேஷண்ட் அவர்தான் என்பதால் அவரை மருத்துவமனை இதழுக்காக பேட்டியெல்லாம் எடுத்தார்களாம்!
மருந்துகளும் சிகிச்சை முறைகளும் எல்லாருக்கும் ஒத்துக்கொள்ளாது. ஒவ்வொருவர் உடலும் ஒவ்வொரு மாதிரி, Every individual is unique. உதாரணமாக, நான் அதிகாலை ஐந்து மணிக்கு மேல்தான் தினமும் உறங்கப் போகிறேன். எனக்கு அப்படி இருப்பதுதான் ஆரோக்கியம். ஆனால் இதை நான் உங்களுக்கு சிபாரிசு செய்ய முடியாது.
இரவில் உறங்கி பகலில் விழித்திருப்பது பெரும்பாலான மனிதர்களுக்குப் பொதுவானது என்பதால் சீக்கிரம் படுத்துவிடுங்கள் என்று சொன்னால் அது ஆரோக்கியம் சார்ந்த அறிவுரைதான். பலருக்கு. ஆனால் எனக்கு அது ஆரோக்கியக் குறைவு தரும்.
தூங்கித் தூங்கி என்ன செய்யப் போகிறோம்? எப்படியும் ஒரேயடியாக தூங்கத்தானே போகிறோம்? அதற்குள் என்ன அவசரம்? அப்படி ஆரோக்கியத்தை காப்பாற்றி வாழ்நாளை எவ்வளவு கூட்டப்போகிறோம்? தெரியாது. ஏனெனில் எப்போது இறக்கப் போகிறோம் என்று தெரிந்தால்தான் அந்தக் கணக்கைப் போட முடியும். நாம் ஞானியாக இருந்தாலொழிய அந்தக் கணக்கு தெரிய வாய்ப்பில்லை. ஞானியாக இருக்கும் பட்சம் எப்போது போகலாம் என்பதை நாமேகூட முடிவு செய்ய முடியும்! என்னைப் பொறுத்தவரை எவ்வளவு நீண்ட காலம் வாழ்கிறோம் என்பது முக்கியமல்ல. எப்படி வாழ்கிறோம் என்பதுதான் முக்கியம்.
அதற்காக கனவக்குறைவாக வாழச்சொல்லவில்லை. கவனமாக, அறிவார்ந்த முறையில் வாழ முயற்சிப்பது வேறு, ஆரோக்கியம் என்ற பெயரில் எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு வாழ்க்கையை ஆரோக்கியம் சார்ந்த ஒரு பிரச்சனையாக்கிக்கொள்வது வேறு.
சமீபத்தில் சேலம் ஆல்ஃபாவுக்காக நான் சென்றிந்தேன். அக்யுபஞ்சர் , டார்ன் சிகிச்சையெல்லாம் தெரிந்த நண்பர்கள் இருந்தார்கள். பேச்சு வாக்கில் அடிக்கடி வாய் வெந்து போகிறது என்று சொன்னேன், உடனே நுட்பமான மூன்று ஊசிகளை என் கால்களிலும் காதிலும் கொஞ்ச நேரம் குத்திவிட்டார்! என் நன்மை கருதித்தான் அவர் அப்படிச் செய்தார். ஆனால் அதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.
அதேபோல, எனிமா கொடுக்கும் கருவி உள்ளதா என்று கேட்டேன். உடனே கொண்டுவந்து கொடுத்து, எப்படி பயன்படுத்த வேண்டும் என்று விளக்கினார்கள். நான் வீட்டுக்கு வந்து யோசித்துப் பார்க்கையில் என் குணாம்சத்துக்கு ஏற்ற அம்சமில்லை அது என்று பட்டது. அதோடு அது இயற்கையான முறையல்ல என்றும் எனக்குப் பட்டது. ஆட்டின் குடலை பிதுக்கிப் பிதுக்கிக் கழுவுவது மாதிரியெல்லாம் நம் குடல்களைச் செய்ய முடியாது. அது உள்ளிருந்தே சரியாகவேண்டும். பாஸ்கர் சொல்வது மாதிரி, ’அது’ வரும்போது நாம் போகவேண்டும், நாம் போகும்போது ’அது’ வராது! அப்படி நாம் செய்ய விரும்புவதும், அதற்கான உபகரணங்களைப் பயன்படுத்துவதும்கூட ஒருவகையில் இயற்கையின் மீதான ஒரு வன்முறைதான்.
ஆனாலும் செய்தீர்களா என்று நண்பர்கள் அன்புடன் விசாரித்தபோது அதை நான் ஒரு நண்பருக்குக் கொடுத்துவிட்டதாகச் சொன்னேன். அது உண்மைதான். ஆனால் நான் சொல்லாத இன்னொரு உண்மை, நான் அதை எப்போதும் செய்துகொள்ளப் போவதில்லை என்பதுதான்!
ஆனால் நான் செய்யாத எதற்கும் நான் எதிரி என்று அர்த்தமல்ல. அதுவெல்லாம் கூடவே கூடாது என்று நான் சொல்ல வரவில்லை. எனக்கு அது உகந்ததல்ல என்று நான் புரிந்துகொண்டேன். அதேபோல உங்களுக்கு எது உகந்தது, எது பொருந்தாது என்று நீங்கள் புரிந்துகொண்டால் உங்கள் உடலும் மனமும் ஏற்றுக்கொள்ளும் எதையும் நீங்கள் அனுமதிக்கலாம்.
சுருக்கமாகச் சொல்வதானால், எல்லா மருந்து மாத்திரைகளிலும், சிகிச்சை முறைகளிலும், உணவுப் பண்டங்களிலும் எல்லைகள், வரையறைகள் உள்ளன. எனக்கு இறால் மிகவும் பிடிக்கும். என் மனைவிக்கு அது அலர்ஜி. எனவே அதை சமைத்து எனக்கு வைத்துவிட்டு அவள் அதை உண்ணமாட்டாள்.
உங்களுக்குப் பிடிப்பதை, பசிக்கும்போது சாப்பிடுங்கள், தூக்கம் வரும்போது தூங்குங்கள் தாகம் வரும்போது தண்ணீர் குடியுங்கள். அவ்வளவுதான். வாழ்க்கை அவ்வளவு எளிதானது. வரையறைகள், எல்லைகள் இல்லாத ஒன்றே ஒன்று இறைவனின் கருணை மட்டுமே. அவன் கொடுத்த மனதை, எண்ணத்தின் சக்தியை நம்புங்கள். எல்லா நோய்களும் தீரும். உங்கள் மனம் உங்கள் டி.என்.ஏ.யி அமைப்பையே மாற்றுகிறது என்பது விஞ்ஞானப்பூர்வமாகவும் நிரூபணமாகிவிட்ட ஒன்று.
இனியும் ஆரோக்கியக் குறிப்பு என்ற பெயரில், இதைச் செய்யுங்கள், அதைச் செய்யுங்கள், சுடு தண்ணி குடியுங்கள், பச்சைத்தண்ணி குடியுங்கள், காய்கறி மட்டும் சாப்பிடுங்கள், அசைவ உணவு மட்டும் சாப்பிடுங்கள் என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருப்பதில், ஆடியோ,வீடியோக்களை ஷேர் செய்து கொண்டே இருப்பதில் என்ன அர்த்தம் உள்ளது? சிந்தியுங்கள். அப்படி சிந்திப்பதே ஆரோக்கியம். இறைவனின் கருணை துணை நிற்குமாக. ஆமீன்.

Mohamed Rafee


Nagore Rumi நாகூர் ரூமி

Advertisements
 
Leave a comment

Posted by on March 4, 2017 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: