RSS

உடலெங்கும் ஊரும் கம்பளிப் பூச்சிகள் … !

01 May

விடிந்தால் சனிக்கிழமை
வாரத்தின் முதல் நாள் !
உடலெங்கும்
கம்பளிப் பூச்சிகள்
ஊர்வது போன்ற அவஸ்தையில்
உறக்கம் தொலையும் இரவு !
விழித்துக் கொண்டே விடியும்
விடிகாலை வேளை ….
ஏக்கம் நிறைந்த கண்களோடும்
துக்கம் கனத்த இதயத்தோடும்
ஆரம்பமாகும் !
காலை உணவு
வெறும் சாயாதான் !
அடித்துப் பிடித்து ஏறி
“ஏஸி ” பஸ்ஸில் பயணித்தாலும்
மனதில் மட்டும்
குறையவே குறையாத சூடு !
வேலை செய்யும் வேளையிலும்
உறவுகளைத் தேடி
தளையறுத்து ஓடும்
மனக் குதிரை !
பொறுப்பில்லாமல் சுற்றித் திரிந்த
வாலிபத்தின்
வசீகர நாட்கள்
வசந்த நினைவுகளாய் வந்து
நெஞ்சில் முட்டும் !
வேதனையின் விம்மல்களோடு
வேலை முடியும்போது
வானத்தின் ஓரத்திலும்
அடிமனத்தின் ஆழத்திலும்
உற்பத்தியாகும் இருட்டு !
விரக்தியை வளர்க்கும் விடியல்கள்
துயரம் தொடரும் இரவுகள் !
************
இன்று வியாழக்கிழமை !
விடியும்போதே
தொலைந்துபோன ஆட்டுக் குட்டியாய்
காணாமல் போன சந்தோசம்
ஓடோடி வந்து
உற்சாகமாய் ஒட்டிக் கொள்ளும் !
ஆறுநாள் இம்சைகள்
நண்பகலோடு
நகர்ந்து போகும் !
அரைநாள் வேலை முடிந்தால்
அப்பொழுதே
பெருநாள்தான் !
வியாழனும் வெள்ளியும்
ஆசீர்வதிக்கப்பட்ட நாட்கள் !
விடிய விடியத் தொடரும்
அர்த்தமே இல்லாத
அரட்டை அரங்கம் !
மதியம் வரை நீளும்
தூக்கத்தின் நீளம் !
நெய்ச்சோறும்
ஆட்டுக்கறியும்
உண்ட களைப்பில்
மாலை வரை அடித்துப்போடும்
ஆனந்த மயக்கம் !
அரபு நாட்டு விடுமுறை நாளின்
மாலை நேரம்
நண்பர்கள்
கடை வீதி
கலகலப்பு என
மாயத்தோற்றம் காட்டும் !
உணர்சிகளை ஊனமாக்கிவிட்டு
உடல்கள் தேடும்
ஊமை சுகங்கள்
படுக்கையில் புரளும்
பாதி ராத்திரி வரையில் !
பார்க்கப் பார்க்க சலிக்காத
உம்மாவின்
கனிந்த முகமும்
கட்டிய மனைவியின்
கண்ணீரில் நனைந்த
கடைசி நேர முத்தமும்
தோள் சுமந்த
சின்னக் குழந்தையின்
தாள முடியாத
பாசக் கதறலும்
ஆழிப்பேரலையாய்
இதயத்தில் எழுந்து
அணு அணுவாய்
உயிரைக் கொல்லும் !
எதைக் கொண்டும்
குளிர்விக்க முடியாத
பிரிவுத் துயரின் வெம்மை
எரிமலையாய் குமுறிக் குமுறி
நெஞ்சை விட்டும் வெளியேறி
கண்ணீராய் கசியும் !
விடிந்தால் சனிக்கிழமை
வாரத்தின் முதல்நாள் ……
@ 2005 துபாய் பயணத்தின்போது நான் கண்டு கண்கலங்கி எழுதிய கவிதை..
வெளிநாடுகளில்
மே தின விடுமுறை கூட இல்லாமல் பணியாற்றும்
என் அன்பு சொந்தங்கள்
நட்புகள் மற்றும்
உழைப்பாளிகள் அனைவரும்
வாழ்வில் உயர
என் அன்பு வாழ்த்துக்கள் !

Abu Haashima

Advertisements
 
Leave a comment

Posted by on May 1, 2017 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: