RSS

தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 18வது இயல் விருது விழா

20 Jun

IMG_20170618_201437நேற்று ஜூன் 18, 2017 தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 18வது இயல் விருது விழா சிறப்பாக நடந்தது.

தமிழ் இலக்கியத் தோட்டம் 2001ம் ஆண்டு டொராண்டோ – கனடாவில் தொடங்கிய ஆண்டிலிருந்து நான் அதன் இயல் விருது விழாவிற்குத் தவறாமல் சென்றுவருவதை மனநிறைவானச் செயலாகச் செய்துவருகிறேன். அன்போடு எனக்கு அழைப்பிதழ் அனுப்புவதை ஒருபோதும் இலக்கியத் தோட்டக் காவலர் அ.முத்துலிங்கம் அவர்கள் மறந்ததில்லை. நன்றி முத்துசார்.

இந்த ஆண்டின் சில சிறப்புகளைச் சொல்லியே ஆகவேண்டும்.

1. இதுவரை பல்கலைக்கழகம் மற்றும் விடுதி மண்டபங்களில் நடத்திவந்த இயல் விருது விழா, இம்முறை அழகிய விருந்து மாளிகையில் அமர்க்களமாய் நடந்தது. புதுமையாக அனைவருக்கும் இரவு உணவும் வழங்கப்பட்டது. தொலைதூர விமானப் பயணத்தில் தரப்படும் உணவைப் போலத் தரமானதாக அது இருந்தது. சுகமாக நண்பர்களுடன் அமர்ந்து இனிதாக அனைத்து உரைகளையும் கேட்க முடிந்தது. ஆக மொத்தத்தில் முன்பெல்லா விருது விழாக்களையும் விட இம்முறை கூடுதல் வசதி கொண்டதாக இருந்தது.

IMG_20170618_173531_0012. தமிழ்த் திரைப்பட இயக்குனர் மிஷ்கின் அவர்களுக்குக் கற்பனையற்ற படைப்புக்கான விருது வழங்கப்பட்டது. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என்ற திரைப்படம்தான் அந்தக் கற்பனையற்றத் திரைப்படம். கற்பனை இல்லாமல் திரைப்படமா என்று விரியும் ஏளனப் புன்னகையை வியாபார யுத்திகள் இல்லாமல் எடுக்கப்பட்ட அந்தப்படம் அப்படியே மாற்றி புருவங்களை வியந்து உயர்த்த வைத்துவிடும் என்பது உண்மை. அதைவிட மிஷ்கினின் வலிமிகுந்த பேச்சு அருமையாக இருந்தது. நேரடியாய் இதயத்திலிருந்து அப்படியே வார்த்தைகளைக் கொட்டினார். விருது தராதோர் உலகில், தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இந்த விருது அவருக்குக் கிடைத்தற்கரிய விருது என்று கூறி அனைவரின் நீண்ட கைத்தட்டல்களைப் பெற்றுக்கொண்டார். இதுவரை திரைப்பட இயக்குனர்களுக்கு விருது வழங்கியதாய் எனக்கு நினைவில்லை. அப்படியே வழங்கி இருந்தாலும் மிஷ்கினுக்கு வழங்கியதை நான் சிறப்பானதென்றே சொல்வேன். சில நிமிடம் அவரோடு உரையாடி ஒரு புகைப்படமும் எடுத்துக்கொண்டேன்.

3. சேலைகட்டி வந்து செந்தமிழ் பேசிய சுவிசர்லாந்து ஈவ்லின் என்ற பெண்மணிக்கு மொழியாக்க விருது வழங்கப்பட்டது. பச்சைச் சேலையில் வெள்ளைப் புறாவாக வந்து ஆங்கிலக் கலப்பே இல்லாமல் தமிழ் பேசியதைப் பாராட்டத்தான் வேண்டும். தமிழ்ச் சிறுகதைகளை ஜெர்மன் மொழியில் ஆக்கித் தந்த இவர் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் பயின்று முனைவர் பட்டம் பெற்றவர். தமிழைப் பிறமொழி நாவின் வழியே கேட்பதைக் காட்டிலும் இனியது குழலும் இல்லை யாழும் இல்லை.

IMG_20170618_2140304. எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்கள் ஹார்ட்வர்ட் தமிழ் இருக்கையின் முதற் கொடையாளர் திருஞானசம்பந்தம் அவர்களின் செயலை அறிமுகம் செய்துவைத்த பேச்சு மிகுந்த சுவை நிறைந்ததாக இருந்தது. பாரி தொட்டு கர்ணனின் தொட்டு வரலாற்றுக் கொடை வள்ளர்களின் குணங்களை விவரித்த விதமும் அவர்களோடு ஒப்பிட்டுப் பேசிய அழகும் வெகுசிறப்பு. தொடர்ந்த திருஞானசம்பந்தம் அவர்களின் நேரடியான பேச்சு. வாழ்வதற்குத் தமிழ் வேண்டும், ஆயிரம் கோவில்களுக்கிடையே அறிவுக் கோவில் ஒன்று வேண்டும் என்று சொல்லிச் சிலிர்த்தார். அவரோடு உரையாடியபோது உங்கள் குடும்பம் பற்றிக் கூறுங்கள் என்றேன். எனக்குப் பிள்ளைகள் கிடையாது தமிழ்தான் என் பிள்ளை தமிழர்கள் எல்லோரும் என் பிள்ளைகள் என்றார்கள். என்னையும் உங்கள் பிள்ளையாய் ஏற்றதற்கு நன்றி என்றேன். அப்படியே கட்டியணைத்துக்கொண்டார். அதில் அன்பும் பாசமும் கதகதப்பாய் இருந்தது. தமிழைத் தாய் என்பார்கள், தமிழைப் பிள்ளையாகவும் பார்க்கும் அந்த மனது தமிழை எப்படிச் செல்லமாகப் பார்க்கிறது, வீழ்ந்துவிடாமல் நிறுத்திப் பிடிக்கும் விழுதுகளாகப் பார்க்கிறது என்று நினைத்து நெகிழ்ந்தேன்.

5. இளம் மாணவிகளிடையே தமிழை ஊக்குவிக்கும் விதமாக, மேடையேறும் தகுதியுடைய பள்ளி மாணவிகளை அவர்களின் அருமை பெருமைகளைச் சொல்லி விருது பெறுவோர் பற்றிய முன்னுரைகளை வழங்கச் செய்தது புலம்பெயர்ந்த நாடுகளில் இளைய தலைமுறையினரிடையே தமிழ் வளர்ச்சிக்கான பாராட்டுக்குரிய பணி என்பதில் ஐயமில்லை.

Sugumaran6. 18 வது இயல் விருது கவிஞர் நா.சுகுமாரன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. அறியப்படாதவரை அறியப்பட வைக்கும் கனடிய இயல் விருது விழாவைப் புகழ்ந்தார். புரியாத ஒன்றையோ பொய்யான ஒன்றையே தான் எழுதுவதில்லை என்று தான் முடிவெடுத்ததாகச் சொன்னது பாராட்டுக்குரியது. காலசுவடுகளைத் தாளில் பதித்துக் கவிதைகள்
மொழியாக்கங்கள் கட்டுரைகள் என்று இருபதுக்கும் மேல் நூல்கள் வெளியிட்டுள்ளார். கவிஞர் சேரன் இயல்விருது பற்றி அருமையான அறிமுகமும் விளக்கமும் கொடுத்துப் பேசினார். அப்படிப் பேசும்போது, ஒரு பெரிய கவிஞனுக்கு தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது கிடைப்பது இதுவே முதல் முறை என்றார். ஆனால் முதல் இயல்விருதே ஒரு பெரிய கவிஞர் சுந்தரராமசாமி அவர்களுக்குத்தானே வழங்கப்பட்டது என்று நான் நினைத்தேன். இவ்வேளையில் பசுவைய்யா என்ற புனைபெயரில் சுந்தரராமசாமியின் புகழ்பெற்ற கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது.

உன் கவிதையை நீ எழுது
எழுது உன் காதல்கள் பற்றி கோபங்கள் பற்றி
எழுது, உன் ரகசிய ஆசைகள் பற்றி
நீ அர்ப்பணித்துக் கொள்ள விரும்பும் புரட்சி பற்றி எழுது
உன்னை ஏமாற்றும் போலிப் புரட்சியாளர்கள் பற்றி எழுது
சொல்லும் செயலும் முயங்கி நிற்கும் அழகு பற்றி எழுது
நீ போடும் இரட்டை வேடம் பற்றி எழுது
எல்லோரிடமும் காட்ட விரும்பும் அன்பைப் பற்றி எழுது
எவரிடமும் அதைக் காட்ட முடியாமலிருக்கும்
தத்தளிப்பைப் பற்றி எழுது
எழுது உன் கவிதையை நீ எழுது
அதற்கு உனக்கு வக்கில்லை என்றால்
ஒன்று செய்
உன் கவிதையை நான் ஏன் எழுதவில்லை என்று
என்னைக் கேட்காமலேனும் இரு

அடுத்து நா. சுகுமாரனின் புகழ்பெற்ற கவிதை ஒன்று. நான் கவிஞரின் மொழிபெயர்பான பாப்லோ நெருதா கவிதைகளை வாசித்திருக்கிறேன். ஆனால் இது மொழியாக்கக் கவிதையல்ல.

அள்ளி
கைப்பள்ளத்தில் தேக்கிய நீர்
நதிக்கு அந்நியமாச்சு
இது நிச்சலனம்
ஆகாயம் அலை புரளும் அதில்
கை நீரை கவிழ்த்தேன்
போகும் நதியில் எது என் நீர்

கவிஞர் சேரனையும் குறிப்பிட்டதால் அவரின் கவிதை ஒன்றையும் இங்கே பகிர்வதுதான் சரி என்று படுகிறது. இதோ சேரனின் கவிதை ஒன்று:

அம்மா அழாதே
நின் காற்சிலம்பிடை இருந்து தெறித்தது
முத்துக்கள் அல்ல
மணிகளும் அல்ல
குருதி என்பதை உணர்கிற பாணிடியன்
இங்கு இல்லை

Ravi Kukadasan7. கழுத்தில் பூட்டுகள் தொங்கும் சங்கிலியோடு, cowboy ஆடையைப் போன்றதோரு கசமுசா ஹாலிவுட் ஆடையோடு ஒருவர் மேடையேறினார். அவரைப் போல ஆடையுடித்தி வந்த இன்னொருவர் விழாவில் இல்லை. எல்லோருமே அலுவலக ஆடை என்று சொல்லும் விதமாகவே வந்திருந்தார்கள். அவர்களுக்கு மத்தியில் இவரின் ஆடை யார் யாரை என்னவெல்லாம் எண்ணம் கொள்ளச் செய்ததோ எனக்குத் தெரியாது. ஆனால் அவர் ஒன்றை அழுத்தமாக அங்கே சொல்லிவிட்டார். ஒருவனின் ஆடையை வைத்தோ அழகை வைத்தோ நிறத்தை வைத்தோ ஒரு புண்ணாக்கு முடிவையும் யாரும் எடுத்துவிட முடியாது. ஏன் தெரியுமா? அவர்தான் தமிழுக்காக டொராண்டோ பல்கலைக் கழகத்துக்கு இரண்டு மில்லியன் டாலர்களை அப்படியே அள்ளிக்கொடுத்த மகா கொடையாளர். அவர்தான் முனைவர் ரவி குகதாசன். மேடையேறிய அந்தத் தமிழ்ப்பற்றாளர் பேசியதெல்லாம் ஆங்கிலத்தில். அந்த முரணும் ஒரு வினோதமானதாகவே இருந்தது. அவரைச் சந்தித்து அவருடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டேன். அப்படியே என் உரையாடல் தொடங்கியது.

எப்படி இத்தனை பெரியதொரு கொடையை அள்ளிக்கொடுத்தீர்கள்?

முத்துலிங்கம் சொன்னாரே, திருஞானசம்பந்தம் சொன்னாரே அதுபோன்ற தொரு மனோ நிலையில்தான்!

உங்களுக்குத் தமிழ் தெரியுமா? தமிழில் உரையாடுவீர்களா?

தெரியும்!

பிறகு ஏன் மேடையில் ஒரு சொல்லும் தமிழில் சொல்லவில்லை?

நான் தமிழில் பேசத் தொடங்கி இருந்தால் என்னால் இப்படிச் சில நிமிடங்களிலேயே கீழே இறங்கி இருக்க முடியாது. அரைமணி நேரமாவது எடுக்க வேண்டி வந்திருக்கும் என்பதால்தான்!

எப்படி வந்தது இத்தனைத் தமிழ்ப்பற்று?

தாய் மொழியையும் தாய் மண்ணையும் விட்டு நான் நாற்பதாண்டுகளுக்கு முன்பே இங்கு வந்துவிட்டேன். தமிழுக்காக நான் எதையும் செய்யவில்லை என்ற ஏக்கம் எனக்குள் பெருகிக் கிடக்கிறது. தமிழ் உலகமெல்லாம் நிறையவேண்டும், புலம்பெயர்ந்தாலும் தமிழர்களெல்லாம் தமிழோடு வாழவேண்டும்!

8. நான் அன்புடன் என்ற ஒரு கூகுள் குழுமத்தைச் சுமார் பதினைந்து ஆண்டுகளுக்குமுன் தொடங்கி நடத்தி வந்தேன். அங்கே கணித்தமிழ் பயின்றவர்களும், தமிழ்க் கவிதை பயின்றவர்களும் ஏராளம். அதில் முக்கியமான ஒரு கவிஞர் இலங்கையைச் சேர்ந்த imagesகவிஞர் ரிஷான் செரீப். அன்புடன் அவர் கவிதைகளுக்குத் தளம் தந்தது உயர்வுக்கு விமரிசனங்களைத் தந்தது. நேற்று அவர் பெயர் இறுதி மணித்துளிகள் என்கிற மொழியாக்க நூலுக்கு அறிவிக்கப் பட்டபோது பெரிதும் மகிழ்ந்தேன். அவர் ஏன் விழாவுக்கு வரவில்லை என்று வருத்தப்பட்டேன்.

9. புனைகதைக்கான விருது பெற்ற சயந்தன், கவிதைக்கான விருது பெற்ற சங்கர ராம சுப்ரமணியன், கணினிச் சாதனைக்காக விருதுபெற்ற சீனிவாசன், இலக்கியச் சாதனை சிறப்பு விருது பெற்ற டேவில் சுல்மான் மற்றும் இரா. இளங்குமரன், மாணவ உதவித்தொகை விருதுபெற்ற சோபிகா சத்தியசீலன் ஆகிய அனைவருக்கும் என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

கவிஞர் சங்கர சுப்ரமணியனின் கவிதை ஒன்று:

தெலைபேசியில் உள்ள எண்காட்டியில்
எண்கள் நடுங்குவதை
முதல் முறையாய் பார்க்கிறீர்களா.
உங்கள் அழைப்புமணியின் ரீங்காரம்
இதவரை செல்லாத நிலவுகளின்
சுவர்களுக்குள்
ஊடுருவுவதை உணர்கிறீர்களா.
நீங்கள் அழைக்கும் நபர்
சற்றுமுன் இறந்தவராய் இருக்கக்கூடும்.

பெருமைகொள் தமிழா என்று தமிழுக்கும் தமிழர்களுக்கும் சேவை செய்யும் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் சிறப்பான இப்பணியை வாழ்த்திப் பாராட்டுவோம்.

அன்புடன் புகாரி
ஜூன் 19ம் 2017, டொராண்டோ, கனடா

https://anbudanbuhari.blogspot.in/IMG_20170618_201428

Advertisements
 
Leave a comment

Posted by on June 20, 2017 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: