RSS

நாகூர் சில பகிர்வுகள்

13 Aug

கடந்த ஒருவாரமாக நாகூரில் இருக்கிறேன். ரொம்ப நாள் கழித்து வந்தேன். நூர் சாதிக், கவிஞர் காதரொலி போன்ற சில நண்பர்களையும் சந்தித்து மகிழ்ந்தேன். கவிஞர் சாதிக் நானாவை நான், நூர்சாதிக், காதர் ஒலி, அலி நான்குபேரும் சென்று பார்த்தோம்.
சாதிக்நானாவுக்கு 80 வயதுக்குமேலாகிறது. ’ஃபாத்திமா வாழ்ந்த முறை உனக்குத் தெரியுமா’, ’சொன்னால் முடிந்திடுமோ’ போன்ற அருமையான ஐந்து பாடல்களை நாகூர் ஹனிபா மாமாவுக்கு எழுதிக்கொடுத்தவர். பல பாடல்களை ஜெயினுல் ஆபிதீன், நெல்லை உஸ்மான் போன்றவர்களுக்குக் கொடுத்தவர். அவருக்கு விரைவில் ஏதாவது கௌரவம் செய்யவேண்டும் என்று முடிவு செய்திருக்கிறோம். இன்ஷா அல்லாஹ் அது நடக்கும்.
இரண்டு முறை தர்காவுக்குச் சென்று வழக்கம்போல தூரத்தில் நின்று ஜியாரத் செய்தேன். ஒரே ஒருமுறை மட்டும் பெரிய எஜமான் காதிர்வலி அவர்களின் பாதணிகள் உள்ள பெட்டியை என் தலையில் படும்படி வைக்க அருகில் சென்றேன். நான் ‘பேண்ட்’ போட்டிருந்ததால் என்னை வெளியூர்க்காரன் என்று நினைத்துக்கொண்ட ஒருவர், ’ஆண்கள் மட்டும்தான் உள்ளே போகவேண்டும், பெண் குழந்தைகள், பெண்கள் வெளியே இருங்கள்’ என்று பழக்க தோஷத்தில் சொன்னவாறு என்னை உள்ளே அழைத்தார்! உள்ளே போய் வந்தால் ஒரு பத்து ரூபாயாவது அவருக்குக் கிடைக்கும்!
ஒரு மாபெரும் இறைநேசரின் அடக்கஸ்தலத்துக்கு எப்படி மரியாதை செய்ய வேண்டும் என்று தெரியாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் அதையும் வருமானத்துக்கு உரிய ஒரு இடமாக மட்டுமே கருதுவது மிகவும் வருந்தத்தக்கது. சேவை மனப்பான்மை இல்லாததும், வியாபார மனநிலை காலம் காலமாகத் தொடர்ந்துகொண்டிருப்பதும் முஸ்லிம்கள் தங்களுக்குள் குழுக்களாகப் பிரிந்து கிடப்பதற்கு ஒரு முக்கிய காரணமென்று நான் கருதுகிறேன்.
மற்றவர்கள் செய்வதெல்லாம் தவறு, தாங்கள் மட்டுமே இஸ்லாத்தை சரியாகப் பின்பற்றுகிறோம் என்று நினைத்துக்கொண்டிருக்கும் குழுக்கள் நடத்தும் பள்ளிவாசல்களில் இருந்து தினமும் தொழுகைக்கான அழைப்பொலி பல திசைகளிலிலிருந்தும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருப்பது தொழுகைக்கான நேரத்தில் குழப்பத்தையும், ஏற்கனவே தொழுதுகொண்டிருப்பவர்களுக்கு இடைஞ்சலையும் தரவல்லதாக உள்ளது. தொழுகைக்கான நேரத்தில்கூட சமுதாயத்தில் ஒற்றுமை இல்லாதது வருந்தத்தக்கது.
இஸ்லாத்தில் ஏற்றுக்கொள்ளத்தக்க அழகிய புதுமைகள் உண்டு. அது ’பித்’அத் ஹஸனா’ (அழகிய புதுமை) எனப்படும். உதாரணமாக, பள்ளிவாசல்களில் ’மைக்’கில் பாங்கு சொல்வது, தரைக்கு மொசைக், ஃபேன், ஏஸி போடுவது, இப்படி.
ஆனால் தொழுகைக்கான அழைப்பொலி மட்டுமின்றி, முழுத் தொழுகையையும் ’மைக்’ வைத்து நிகழ்த்துவது இஸ்லாத்தில் இல்லாத தவிர்க்க வேண்டிய புதுமை. இது ஒரு Public Nuisance ஆக உள்ளது. தெருவில் உள்ள குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள் யாரும் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை.
ஊரில் உள்ளவர்கள் உடல் நலம் பற்றி எங்களுக்கு அக்கறையில்லை, நாங்கள் மார்க்கத்தை ’மைக்’ வைத்து ‘உரக்கச்’ சொல்லிக்கொண்டே இருப்போம் என்ற ரீதியில் சில குழுக்கள் தொடர்ந்து நாகூரில் இயங்கிவருகின்றன.
யார் தன்னுடைய கையாலும் வாயாலும் இன்னொரு முஸ்லிமுக்குத் தீங்கிழைக்கவில்லையோ அவரே உங்களில் சிறந்த முஸ்லிம் என்று ஒரு சஹீஹ் நபிமொழி உள்ளது. அதைப்பற்றி சமுதாயம் சிந்திக்க வேண்டும்.
கோயில் திருவிழா என்பதால் இரவு பன்னிரண்டு மணிக்கும் மேல், அதிகாலை மூன்று, நான்கு வரை பட்டாசு வெடித்து, கச்சேரி வைத்து ’மைக்’கில் சப்தமாக தங்கள் பக்தியை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்?
சமுதாய நலன் கருதும் சகோதரர்கள் சிந்திக்க வேண்டும் என்ற வேண்டுகோளை இங்கே வைக்கிறேன்.
நண்பர் பேரா.அமானுல்லாவின் அன்புத்தொல்லையின் பேரில் சென்ற 8-ம் தேதி அவர் பணிபுரியும் திருவாரூரில் உள்ள ராபியா அம்மாள் மகளிர் கல்லூரிக்குச் சென்று மாணவிகள் மத்தியில் ஒரு மணி நேரம் வாழ்க்கையில் வெற்றி பற்றிப் பேசினேன். பின்பு ஆங்கில இலக்கியம் பயிலும் மாணவிகளோடு ஒரு மணி நேரம் பேசினேன்.
நான் நாகூரில் இருப்பது கேள்விப்பட்டு மகள் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் உரிமையாளரும் சிந்தனையாளருமான சகோதரர் அமீர் ஜவஹர் அவர்கள் என்னைப் பார்க்க வந்தார்.கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தோம். என் ’வரலாறு படைத்த வரலாறு’ நூலை அவருக்குப் பரிசளித்தேன்.
ஜஃபருல்லாஹ் நானாவையும் என் தந்தையையும் பார்க்கச் சென்றேன். இருவருக்கும் இரண்டு விதமான பிரச்சனைகள். நானாவுக்கு மொழி போய்விட்டது. ’லலலலல’ என்பதைத்தவிர வேறு சொல்லை அவரால் சொல்ல முடியவில்லை! ஒரு காலத்தில் சமுதாயத்தை சிந்திக்க வைத்துக்கொண்டிருந்த சிறப்பான பேச்சாளர்! அவருடைய ஒவ்வொரு சொல்லும், கேள்வியும் சிந்தனையைத் தூண்டுபவை. வித்தியாசமான சிந்தனைக்குப் புகழ்பெற்றவர் அவர். என்னை உருவாக்கியவர்களில் ஜஃபருல்லாஹ் நானாவும் ஒருவர். கவிஞர், பேச்சாளர், அருமையான பாடகர், நல்ல குரல் வளம் மிக்கவர், சுயமான சிந்தனையாளர். சுருக்கமாகச் சொன்னால் இஸ்லாமிய சமுதாயத்தில் நாகூருக்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம். என் மீது அளப்பரிய அன்பு கொண்டவர். அவர் பேசமுடியாமல், தனியாக அமர்ந்து யாருமே இல்லாத அறையில் ‘லலலலல’ என்று உரக்கச் சொல்லிக்கொண்டிருப்பதை என்னால் பார்க்க முடியவில்லை.
அடுத்தது என் தந்தை. அவருக்கு பிரச்சனை மறதி. கொஞ்சம் கொஞ்சமாக குடும்பத்தில் ஒவ்வொருவராக மறந்துகொண்டிருந்தார். முதலில் பேரக்குழந்தைகள், பின்னர் மகள்கள் என்று. என்னையும் அவரது முதல் மனைவியுமான என் ம்மாவையும் நினைவு வைத்திருந்ததாக தங்கை சொன்னாள்! ஆனால் இப்போது நாங்கள் யாருமே அவர் நினைவில் இல்லை! நேரில் சென்று பார்த்தேன். என்னை எந்த ஊர் என்று கேட்டார்! சின்னம்மாவையாவது தெரிகிறதா என்றால் ’ஏன் தெரியாது? என் அம்மா’ என்றார்! அவருக்கு வயது 80க்கு மேலிருக்கும்.
அவர்கள் இருவருக்காகவும் நான் பிரார்த்தித்துக்கொள்கிறேன். இப்படியெல்லாம் பிரச்சனை வரும் என்று கற்பனைகூட என்னால் செய்து பார்த்திருக்க முடியாது. ஆனால் மாற்றங்கள்தான் வாழ்க்கை. மாற்றம் வரும் என்பதில் மட்டும் மாற்றமே இல்லை. பிரச்சனைகள் யாவும் ஒருநாள் தீர்ந்துபோகும். அந்த மாற்றமும் நிச்சயம் வரும் என்றும் நம்புவோம்.
அன்புடன்

நாகூர் ரூமி
நாகூர் ரூமி

Advertisements
 
Leave a comment

Posted by on August 13, 2017 in 1

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: