RSS

Category Archives: கதைகள்(Stories)

தோற்றுத்தான் போகிறோம்

pm0106059

தோற்றுத்தான் போகிறோம்
வழியற்று நாம்

காரணம்…

எங்கோ தூரத்திலல்ல
பக்கத்தில்தான்

விலகியவர்களாக அல்ல
நெருக்கமானவர்களாகத்தான்

காய்ச்சொல் ஈபவர்கள்களாக அல்ல
கனிமொழி குழைபவர்களாகத்தான்

வெறுப்பாடிக்கொண்டல்ல
உறவாடிக்கொண்டுதான்

நம் தோள் பற்றித்தான்
அணைத்தழைத்துச் செல்பவர்களாகத்தான்

அன்போடுதான்
அருகிலேயேதான்

நம்மோடுதான் இருக்கிறார்கள்
நமக்கான நம் எதிரிகள்

தோற்றுத்தான் போகிறோம்
வழியற்று நாம்

காரணம்….

ஏக்கங்களால் அபகரிக்கப்பட்டு
தவித்துத் தவித்து
நடுங்கும் விரல்களோடு
நண்பர்களைத் தேடும்போது
எதிரிகள்தான் நண்பர்களாகிறார்கள்

நண்பர்களெல்லாம்
பயந்து பதுங்கி இருட்டுக் குழிகளில்
அடையாளங்களற்று
உடைந்து கிடக்கிறார்கள்

தோற்றுத் தோற்றுப் போன
தொடர் களைப்பில்

15747_102183289806853_100000455463856_55302_1348971_n

அன்புடன் புகாரி

Advertisements
 

இவன் மானிடன்..!

idfgfmagesமானிடனாய்ப் பிறந்துவிட்டோம் – நாம்
மதிகெட்டு இருந்துவிட்டோம்

ஏட்டிலுள்ளதை படித்துவிட்டோம் – அதையேன்
படித்தோம் மறந்துவிட்டோம்

மதசாதியால் பிரிந்துவிட்டோம் – மனம்,
அதை சகதியால் நிரப்பிவிட்டோம்

பணத்தை மனதிலே எத்திவிட்டோம் – குணம்,
அதை குப்பையிலே கொட்டிவிட்டோம்

கொள்ளாத குற்றங்களை செய்திடுவோம் – பலம்
இல்லாத எளியவன்மேல் பழிசொல்லிடுவோம்

தள்ளாத வயது சென்றிடுவோம் – அன்றும்
இல்லாத பெருமை பேசிடுவோம்

மானங்கெட்ட ஈனப்பிறவியடா மானுடன் – இவன்
மாண்டு அழிந்தாலும் மனம் குணம் மாறிடன்
Rafeeq ul Islam
Source : http://rafeeqspoem.blogspot.in/2009/11/blog-post_23.html

 

இதற்குப் பெயர் தான் காதலா?

நந்தனம் சிக்னலுக்கு அருகிலிருக்கும் ஜனதாமெஸ்ஸின் வாசலில் ஒரு நாள் தம்மின் கடைசி இழுப்பை ரசித்தவாறு இழுத்துக் கொண்டிருந்தபோது தான் முதலில் அவளைப் பார்த்தேன். மஞ்சள் பூப்போட்ட சுடிதார். கண்ணுக்கு மஸ்காரா. காதுக்கு பெரிய ஸ்டப்ஸ். கொஞ்சம் குள்ளமாக இருந்ததால் ஆறு இன்ச் செருப்பு. சிகப்பு என்று சொல்ல இயலாத கவர்ச்சியான மாநிறம். அழகு சொட்டுகிறது என்று உடனடியாக சொல்லமுடியாவிட்டாலும் சுமாரான அழகிதான் அவள்.

பார்த்ததுமே மனசில் பச்சக்கென்று ஃபெவிஸ்டிக் மாதிரி ஒட்டிக் கொண்டாள். தம்மின் கடைசி இழுப்பை இழுத்த எனக்கு இருமல் வந்தது. லொக்… லொக்… லொக்… தொடர்ச்சியாக ஐம்பது நொடி இருமல்.

கண்களில் நீர் கோர்த்தது. என்னவளை அடையாளம் கண்டுக் கொண்டதால் ஏற்பட்ட ஆனந்தக் கண்ணீரா? இல்லையென்றால், அவ்வழியாக கொசுவண்டி அளவுக்கு புகையைத் தள்ளிச்சென்ற யமஹாவின் கைங்கரியமா தெரியவில்லை. ஒரே ஒரு நொடிதான். என் இதயம் என்னைவிட்டு விண்ணில் பறப்பதை உணர்ந்தேன். ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ சிம்பு போல் மாறினேன்.

நந்தனம் சிக்னலில் கண்ட மயிலின் நினைவே இருநாட்களுக்கு என் உள்ளத்தை கொள்ளை கொண்டிருந்தது. திரும்ப அவளைப் பார்க்கமுடியுமா, முடியாதா? என்பது தெரியாமலேயே அவள் பால் என் உள்ளம் ஈர்க்கப்பட்டுக் கொண்டிருந்தது.

அறை நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு காதலி உண்டு. எப்படி காதலிக்கிறார்கள், முதன்முதலாய் காதலை எப்படி சொன்னார்கள்? என்று கதைகதையாய் சொல்லும்போது ”எனக்கொரு கேர்ள் பிரண்டு வேணுமடா?” என்று மனதுக்குள் வேதனையாய் பாடுவேன்.

 • கடந்து செல்லும் பெண்களையெல்லாம் காதலிக்கச் சொல்லும் வயசுதான் என்றாலும் என் காதலி யாரென்று தெரியாமலேயே, காதலிப்பதற்கான சாத்தியக்கூறு ஏதும் இல்லாமலேயே வீணாகிக் கொண்டிருந்தது என் இளமை. நந்தனத்தில் பார்த்த அந்த மஞ்சள் மைனாவின் திடீர் வரவால் வசந்தமானது. மின்னலே மாதவன் மாதிரி அந்த ஒரு நொடி தரிசனத்தில் முற்றிலுமாய் மாறிவிட்டேன்.

  அவள் தான் என் காதலி என்று இப்போது தீர்மானமாக முடிவெடுத்துவிட்டேன். ஒருமுறை கண்டவளை மறுமுறை காண இப்போதெல்லாம் தினமும் ஏங்குகிறது என் மனது. ஒரு கோடி பேர் வந்து செல்லும் சென்னை மாநகரில் எங்கேதான் அவளை போய் தேடுவது?

  பெண்கள் வந்துப் போகும் கோயில்களில் எல்லாம் தினமும் மாலையில் தேடுகிறேன். பிரம்மச்சாரியான ஆஞ்சநேயர், பிள்ளையார் கோயில்களுக்கு ஏன் இளம்பெண்கள் அதிகம் வருகிறார்கள்?

  ஸ்பென்ஸர் ப்ளாஸா, அல்சா மால், சிட்டி சென்டர் ப்ளாஸா பக்கமாக செல்லும்போதெல்லாம் மஞ்சக்குருவி தென்படுகிறாளா என்று பார்வையை ஓட்டுகிறேன். மகளிர் கல்லூரிகளை கடைக்கும்போதெல்லாம் மைனா மாட்டுவாளா என்று கண்களால் சலிக்கிறேன்.

  அவளை முதன்முறையாக கண்டபோது எனக்கு இருமல் வந்ததால் இப்போதெல்லாம் இருமல் வராவிட்டாலும் கூட இருமி, இருமி அவளை நினைவுப் படுத்திக் கொள்கிறேன். அதிகமாக இருமுவதால் எச்சில் துப்பும்போது எச்சிலோடு இரத்தமும் வருகிறது. தொண்டையில் புண் ஏற்பட்டிருக்கலாம். அவளைக் காணவே முடியாத பிரிவுத்துயரால் பசலை நோய் கண்டு நான் அடிக்கும் சிகரெட்டுகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது.

  அவளின் நினைவால் எப்போதும் வானத்தில் பறப்பது போல இருக்கிறது. நிச்சயமாக பெண் ஒரு போதை. கண்ணதாசன் சரியாகதான் சொல்லியிருக்கிறார். 32 இன்ச் இருந்த என் இடுப்பு திடீரென்று 28 இன்ச்சாக குறைந்துவிட்டது. 65 கிலோ இருந்த நான் 52 கிலோ ஆகிவிட்டேன். தூக்கம் வருவதில்லை. பெண்களை சைட் அடித்தால் முகத்தில் பரு வரும் என்பார்கள். அவளைத் தவிர வேறு யாரையும் சைட் அடிக்கப் போவதில்லை என்ற போதிலும் பருக்கள் போன்ற சிறுசிறு கட்டிகள் முகத்திலும், மார்பிலும் நிறைய வருகிறது.

  முன்பெல்லாம் ஒரு நாளைக்கு மூன்று முறை மூக்கு முட்ட தின்றுக் கொண்டிருந்த நான் இப்போது மதிய உணவு மட்டும் வேண்டா வெறுப்பாக சாப்பிடுகிறேன். இரவுகள் வியர்க்கிறது. பகலில் குளிருகிறது. வைரமுத்து சொன்னது போல வயிற்றுக்குள் இருந்து ஏதோ ஒரு பந்து இதயம் வரை அவ்வப்போது எழுகிறது. ச்சே! காதல் இத்தனை அவஸ்தைகளை தருமா?

  எப்போதும் எதையோ செதுக்குவது போல உணர்வு. வேலையிலும் – படிப்பிலும் கவனமின்மை, சக்தி முழுவதும் வடிந்துவிட்டது போல ஆயாசம், இரத்த அணுக்களெல்லாம் மொத்தமாக ஒரே நாளில் செத்துப் போனது போல விரக்தி, நாள் முழுக்க கல்லுடைப்பவனுக்கு கூட அத்தனை வலி இருக்காது. கை, கால், தோள், வயிறு, இதயம் எனக்கு நினைவுக்கு வரும் உறுப்புகளில் எல்லாம் வலி.. அய்யோ கடவுளே! எனக்கு ஏன் காதலை கொடுத்தாய்?

  உருகி, உருகி ”இதுதான் காதல்” என்று நான் உங்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நேற்று என்னை பரிசோதித்த மருத்துவரோ எனக்கு கேன்சர் வந்திருக்கிறது என்கிறார். நீங்களே சொல்லுங்கள் எனக்கு வந்திருப்பது காதலா? இல்லை புற்றுநோயா?
  எழுதியவர் யுவகிருஷ்ணா

  Source : http://www.luckylookonline.com/2012/02/blog-post_13.html

   
 • Tags:

  அம்மா x அப்பா = நான்

  உஷாதீபன்

  அம்மா அப்பாவுக்குள்ள எப்பவும் சண்டைதான். எதுக்குத்தான் சண்டை வருதுன்னு சொல்லவே முடியாது. எப்பப் பார்த்தாலும் சண்டைதான். ஏதாச்சும் ஒன்றை அம்மா சொல்ல, அதை அப்பா மறுத்துப் பேச அல்லது அப்பா சொல்ல அதை அம்மா முடியாதுங்க, சண்டை வந்துடும். அப்டியே பேச்சுக்குப் பேச்சு, வார்த்தைக்கு வார்த்தைன்னு வளர்ந்திட்டேயிருக்கும்.

  எதுக்காக இவுங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்கன்னு எனக்குத் தோணும். ஒருத்தருக்கொருத்தர் சண்டை போடணும்னு எங்கேயாவது, யாராவது சேருவாங்களா? அல்லது சேர்த்துதான் வைப்பாங்களா? சந்தோஷமா, ஒத்துமையா வாழணும்னுதானே கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க? ஆனா இப்படி சண்டை போடுவாங்கன்னு அவுங்க என்ன நினைச்சா இருப்பாங்க? அப்படி நினைச்சிருந்தாந்தான் இப்படி வந்து வந்து சமாதானம் பண்ணுவாங்களா? அதுதாங்க இதிலே அதிசயம்! ஆச்சரியம்!!

  யாராச்சும் வீட்டுக்கு வந்துட்டா…அம்மாவும் அப்பாவும் இருக்கிற இருப்பைப் பார்த்தா என்னால நம்பவே முடியாதுங்க…

  விருந்தாளி நுழைஞ்சதுக்கு முந்தின அஞ்சு நிமிஷம் வரைக்கும், ஏன் வாசப்படி மிதிக்கிறவரைக்கும்னு கூட வச்சிக்குவமே… காய்ரா பூய்ரான்னு கத்திக்கிட்டுக் கிடந்தவங்க, வாசல் கேட் திறக்கிற சத்தம் கேட்டவுடனே…அடடே! வாங்க, வாங்க, வாங்கன்னு கூப்பிடுற அழகைப் பார்க்கணுமே?அடேயப்பா!! அம்மா சந்தோஷமாச் சிரிச்சா பார்க்க எவ்வளவு அழகா இருக்கு? Read the rest of this entry »

   

  பாசம் இலவசம்

  ‘இன்னிக்கும் கடுதாசி வரல பெரியவரே…’ சொல்லிவிட்டுக் கடந்து போன தபால்க்காரனையே பார்த்துக்கொண்டிருந்தார் வேதாச்சலம். வேதாச்சலத்துக்கு வயது அறுபத்து ஐந்து இருக்கும். பார்வை இப்போதெல்லாம் அவருக்கு சரியாகத் தெரிவதில்லை. ஒரு ஆரம்பப்பாடசாலையில் வாத்தியார் வேலை செய்து ஐம்பத்து எட்டு வருடங்களை நகர்த்தியாகி விட்டது. காலில் அவ்வப்போது வந்து போகும் வீக்கம். முகத்தில் சோர்வின் தழும்புகள். முதுமை ஒரு கொடுமை என்றால் முதுமையில் தனிமை அதை விட கொடுமையானது…  இளமையில் வறுமை யும் முதுமையில் தனிமையும் இரண்டும் இல்லாத வாழ்வு, பலருக்கு அது பகல்க்கனவு.

  ஏங்க … இன்னிக்கும் பையனோட லெட்டர் வரலையா ? சமையலறையிலிருந்து குரல் கொடுத்தாள் மாலதி. இல்லே… என்னிக்கு தான் லெட்டர் எல்லாம் ஒழுங்கா வந்து சேர்ந்திருக்கு. எதுவுமே சரியான நேரத்துக்கு வரது இல்லே. அது டவுண் பஸ் ஆனாலும் சரி, கடுதாசி ஆனாலும் சரி, ஏன் இந்த பாழாப்போன சாவு கூட சரியான நேரத்துக்கு வரதில்லே… சொல்லி முடித்த வேதாச்சலத்தின் கண்கள் நனைந்திருந்தன. மெதுவாக எழுந்து வீட்டின் கொல்லைப்பக்கமாக நடக்கத் துவங்கினார்.

  அது ஒரு ஓட்டு வீடு, பின்பக்கம் நீளமான கொல்லை, வீட்டின் கிழக்குப் பக்கத்தில் கன்னிமூலை பார்த்துக் கட்டிவைத்த கிணறு… பின் பக்கம் அரை ஏக்கர் நிலத்தில் மரச்சீனிக்கிழங்கு பயிரிடப்பட்டு அதற்கு வேலியாக பலா மரங்கள் நடப்பட்டிருந்தன. எங்கும் ஒரு நீண்ட அமைதி.

  வேதாச்சலம் ஒன்றும் தனி மனிதர் இல்லை, அவருக்கு ஏழு பிள்ளைகள். அவர் காலத்திலெல்லாம் அதிக குழந்தை பெற்றுக்கொள்வதெல்லாம் சர்வ சாதாரணம். பக்கத்து வீட்டு பொன்னம்மாவுக்கு 2 புருஷனும் 16 பிள்ளைகளும் என்று சொன்னால் இப்போதெல்லாம் சிரிப்பார்கள், இல்லையேல் நம்ப மாட்டார்கள். ஆனால் அது தான் நிஜம்.
  அந்த பதினாறு பிள்ளைகளும், அவர்களின் பிள்ளைகளுமாக அந்த கிராமத்தில் எல்லா மூலைகளிலும் அவர்களுக்கு உறவினர் பட்டாளம் தான். கடந்த ஆண்டு தான் பொன்னம்மா செத்துப்போனாள். நூறு வயது வரை இருப்பாள் என்று எல்லோராலும் கணிக்கப்பட்டு அதற்கு இரண்டு வருடங்கள் இருக்கும் போதே இறந்து போய்விட்டாள் பொன்னம்மா. ஆனால் அதில் என்ன வருத்தம் என்றால், சாகும்போது அவளுடைய பிள்ளைகளில் ஒருவர் கூட அருகில் இல்லை. கடைசி காலத்தில் பிள்ளைகள் அருகில் இல்லாமல் இறக்க நேரிடுவது ஒரு மிகப்பெரிய வலி என்று தோன்றியது வேதாச்சலத்துக்கு.

  வேதாச்சலத்துக்கு நான்கு பெண் பிள்ளைகள். எல்லோரும் திருமணம் ஆகி தனிக்குடித்தனம் போய் விட்டார்கள். எப்போதேனும் குழந்தை களோடு வந்து போவார்கள். அப்போதெல்லாம் வேதாச்சலம் ஒரு குழந்தையாகவே மாறிவிடுவார். குழந்தைகளோடு சிரித்து, விளையாடி இனிப்புகள் கொடுத்து… அப்படி வேதாச்சலத்தை பார்ப்பதே மாலதிக்கு மகிழ்ச்சியாய் இருக்கும்.
  ‘இது தாண்டி, இதுக்கு மேல என்ன வேணும் எனக்கு… எல்லா பிள்ளைங்களையும் கரையேத்திட்டேன்…
  பசங்களை படிக்க வெச்சுட்டேன்… ஒரு பையனை அமெரிக்கா வுக்கே அனுப்பிட்டேன்.. இந்த உசுரு இப்போ போனாகூட கவலையில்லே…’ என்று அப்போதெல்லாம் மனைவியிடம் சொல்வார். ஆனால் குழந்தைகள் விடுப்பு முடித்து போன பிறகு அவரை மீண்டும் அந்த தனிமை சூழ்ந்து கொள்ளும்.

  எப்போதுமே தனியாக இருப்பது வேதாச்சலத்துக்குப் பிடிப்பதில்லை. கோயிலில் தேவசம் போர்டில் அவருக்கு ஒரு தனி மரியாதை இருந்தது. சமையச் சொற்பொழிவுகளுக்கு வேதாச்சலத்தை விட்டால் யாரும் இல்லை என்கின்ற நிலமை. அதிலும் இதிகாச கதைகளை வாழ்வியல் நிகழ்வுகளோடு கதாபாத்திரங்களோடு ஒப்பிடுவதற்கு அவரை விட்டால் ஆளில்லை. ” செய்நன்றியில் சிறந்தது கர்ணனா..கும்ப கர்ணனா” என்னும் தலைப்பில் அவர் பேசிய சொற்பொழிவிற்காக அவருக்கு அந்த சாஸ்தான் கோயிலில் பாராட்டுப் பத்திரமே வாசித்தார்கள். ஆனால்
  இப்போது நிலமையே வேறு…. தொண்டை கட்டிப்போன குரலுடன், நடுங்கும் தொனியில் தான் வார்த்தைகளே வரும். போதாக்குறைக்கு சிறு நீரகக் கோளாறு வேறு… அமெரிக்காவிலிருக்கும் மகனிடமிருந்து கடிதம் வந்து ரொம்ப நாட்களாகிறது. வீட்டிற்கு ஒரு போன் வைக்கலாம் என்றால் இந்த வயல்க்காட்டை எல்லாம் தாண்டி கம்பிகள் இழுத்து வருவதற்கு நிறைய நாட்களாகுமாம். ஏதேதோ எண்ணங்களோடு அந்த புளிய மரத்தின் நிழலில் உட்கார்ந்தார் வேதாச்சலம். அந்த புளியமரம், ஒருகாலத்தில் தன்னுடைய பிள்ளைகள் ஊஞ்சல் ஆடி ஆடி விளையாடிய மரம். இப்போது அதுவும் தனிமை தின்றுகொண்டிருந்தது. கிளைகளில் எப்போதாவது வந்து தங்கிப்போகும் காகத்தைத் தவிர எதுவும் இல்லை. முன்பெல்லாம் அதன் கிளைகளில் வெளவால்களாய்த் தொங்கி விளையாடுவார்கள் வேதாச்சலத்தின் மகன்கள். இப்போது அவர்களும் வேலை வேலை என்று வெளியூர் போய் செட்டிலாகி விட்டார்கள்.

  வறுமையில் பிறந்து கடின உழைப்பால் நடுத்தர நிலமைக்கு வந்தவர்தான் வேதாச்சலம். தன் பிள்ளைகளாவது வறுமையில் விழக்கூடாது என்பதில் உறுதியாய் இருந்தார். நன்றாகப் படிக்க வைத்தார். இப்போது பிள்ளைகள் அவர்களுக்கான பாதையில் நடக்கத்துவங்கிய போது அவருக்கு கஷ்டமாக இருக்கிறது.

  ‘ வந்து சாப்பிடுங்க .. என்ன தவம் செய்யறீங்களா ?’ மாலதியில் குரல் பின்னாலிருந்து எழ திரும்பிப்பார்த்தார்.
  இல்லடி… நம்ம பையன் கிட்டே இருந்து ஒரு கடுதாசி வந்து எவ்வளவு நாளாச்சு. நாம என்ன கேக்கறோம் ? ஒரு நாலு வரிக் கடுதாசி, அவ்ளோ தானே.. பிள்ளைங்களுக்கு ஏன் இதெல்லாம் புரியாம போச்சு ?
  பேசாம நம்ம வயலில விவசாயம் பாக்க பிள்ளைங்களைப் பழக்கி இருக்கலாம்.. காலம் பூரா பாத்துட்டாவது இருந்திருக்கலாம். இப்ப பாரு ஐம்பத்தெட்டு வருஷம் நானும் நீயும் வேலை பாத்தோம்… அப்போ நாம வெளியே பிள்ளைங்க வீட்டில. இப்போ பாரு நமக்கு வயசாயிடுச்சு , ரிட்டயர்ட் ஆயிட்டோ ம்… இப்போ பிள்ளைங்க எல்லாம் வெளியே இருக்காங்க. நம்ம பிள்ளைங்க கூட நாம சரியா, சந்தோஷமா இருக்க முடியல. இப்போ யாராவது பக்கத்துல இருக்க மாட்டாங்களான்னு ஒரு ஏக்கம் தான். ஒரு கடுதாசி போடக்கூட பசங்களுக்கு நேரம் இல்லை. சொல்லிவிட்டு வெறுமையாய்ச் சிரித்தார் வேதாச்சலம். Read the rest of this entry »

   

  முல்லா கதை-மீன்

  மீன்

  ஒரு தடவை அறவொழுக்கத்தை நேசிக்கும் பிரபலமான தத்துவவாதி ஒருவர் முல்லா வசிக்கும் ஊரை கடந்து செல்ல வேண்டியிருந்தது. அப்போது சாப்பாட்டு நேரமாகையால் அவர் முல்லாவிடம் நல்ல உணவு விடுதி எங்குள்ளது என்று கேட்டார். முல்லா அதற்கு பதில் சொன்னவுடன், தத்துவவாதி போகும் போது பேச ஆள் கிடைத்தால் நல்லது என்ற எண்ணத்தில் முல்லாவையும் தன்னுடன் சாப்பிட வருமாறு அழைத்தார்.

  முல்லாவும் நெகிழ்ந்து போய் அந்த படிப்பாளியை அருகிலிருந்த உணவு விடுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கே போன பிறகு ‘அன்றைய ஸ்பெசல் அயிட்டம் என்ன?’ என்று கடைச் சிப்பந்தியிடம் கேட்டார் . முல்லா ‘மீன்! புதிய மீன்!’ என்று பதில் சொன்னார் சிப்பந்தி. ‘இரண்டு துண்டுகள் நல்லதாக கொண்டு வாருங்கள்’ என இருவரும் ஆர்டர் செய்தனர்.

  சிறிது நேரம் கழித்து ஹோட்டல் சிப்பந்தி ஒரு பெரிய தட்டில் இரு மீன் துண்டுகளை வைத்துக் கொண்டு வந்தார். அதில் ஒரு துண்டு பெரியதாகவும், இன்னொரு துண்டு சிறியதாகவும் இருந்தது. அதைக் கண்டவுடன் முல்லா எந்தவொரு தயக்கமில்லாமல் பெரிய மீன் துண்டை எடுத்து தனது தட்டில் போட்டுக் கொண்டார். முல்லாவின் செய்கையால் கடுப்படைந்து போன தத்துவவாதி முல்லாவைப் பார்த்து கடுமையாக முறைத்து விட்டு, ‘முல்லா நீங்கள் நடந்து கொண்ட முறையானது எந்த தர்ம, நீதி, நியாய, மத சாஸ்திரத்துக்கும் ஒத்துவராத ஒன்றாகும்’ என்றார்.

  முல்லா, தத்துவவாதி சொல்லுவதையெல்லாம் மிக அமைதியுடன் பொறுமையாக கேட்டுக் கொண்டு வந்தார். கடைசியாக அந்த மெத்தப் படித்தவர் பேசி முடித்தவுடன், “நீங்களாக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?” என்றார் முல்லா. “நான் மனச்சாட்சியுள்ள மனிதனாகையால் சிறு மீன் துண்டை எடுத்திருப்பேன்”. ‘அப்படியா, ரொம்ப நல்லது. இந்தாருங்கள் உங்கள் பங்கு’ என்று சொல்லி சின்ன மீன் துண்டை அந்த தத்துவவாதி தட்டில் வைத்தார் முல்லா.

   

  மடி நனைந்தது

  baby n mumஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்ஜார்ஜாகி, ஓரடி எடுத்து வைப்பதற்குள் நெஞ்சுக்குள் பொங்கிய குமுறலை ஆபிதாவால் அடக்கி வைத்திருக்க முடியவில்லை. அன்வரின் மார்பில் முகம் புதைத்து ஒரு குழந்தையைப் போலத் தேம்பித் தேம்பி அழளானாள்.

  அன்வருக்கு மாத்திரமென்ன இழப்பின் ஆற்றாமை இல்லையா? அவன் இதயம் ஊமைப்புலம்பலாய் அழுது கொண்டிருந்தது ஆபிதாவுக்குத் தெரியுமா? ஆயினும், அவன் ஓர் ஆண் பிள்ளையாயிற்றே! பெண்மயின் பலவீனம் அணையுடைத்துப் பாயும்போது ஆறுதல் சொல்லியாக வேண்டிய ஒரு பொறுப்பு மிக்க கணவனல்லவா?

  சே, சே, என்ன ஆபிதா இது, குழந்தை மாதிரி? அதோ பார், நாலு பேர் நம்மையே பார்க்கிறார்கள். கண்ணைத் துடைத்துக் கொள்.. “ என்று அவன் வாய் ஆறுதல் சொற்களை உதிர்த்த போதிலும், அந்த அழுகையும்ம் தேம்பலும் ஒரு தாய்மை நெஞ்சிலிருந்து வெளிப்படுகிற இயல்பான குமைச்சல் என்பதையும் அவனால் உணர முடிந்தது.

  இங்கே,..இங்கே வருகிறபோது எவ்வளவு சந்தோஷமாக…எத்தனை மகிழ்ச்சியோடு வந்தேன்..இப்போது எல்லாமே… எல்லாமே” நிகழ்ந்து முடிந்துவிட்ட அந்த மோசமான சம்பவத்துக்கு ஆபிதாவால் வார்த்தை வடிவம் தர முடியவில்லை.

  உண்மைதான். ஏழு நாட்களுக்கு முன்பு இதே ஆஸ்பத்திரி வாயிலில் அவர்கள் வந்த குதிரை வண்டி நுழைந்தபோது ஆபிதாவின் நெஞ்சம் எத்தனை ஆனந்தப் பரவசத்தில் மூழ்கிக் கிடந்தது. எவ்வளவு எழில் கனவுகள் கண்டுகொண்டிருந்தது. எல்லாமே இப்போது நாசம்தான். நினைப்பதெல்லாம் நடப்பதில்லையே என்கிற புளித்துப்போன சித்தாந்தத்தை எண்ணி மனம் தேறுகிற நிலையில் அவளில்லை. ‘ஏன் நினைக்க வைத்தாய் இறைவா?’ என்று அரூபமாகி நிற்கிற அந்த ஏகனுக்கு கேள்வி எழுப்பிக்கொண்டு நின்றது அது.

  அன்வரின் விழிகளைக்கூட வெண்பனி திரையிட்டது. ஆபிதாவின் பச்சை உடம்பைக் கைத்தாங்கலாகப் பற்றியபடி ஆஸ்பத்திரி கேட்டைக் கடந்துகொண்டிருந்தான் அவன். காலை நேரமாதலால் பிணி கொண்ட மனிதர்களின் ஜீவனற்ற கலகலப்பில் தோய்ந்து நின்றது அந்த ஆஸ்பத்திரியின் வெளிப்புறம். வண்டியில் சாத்துக்குடிப் பழங்களில் வியாபாரம் செய்கிற நடைபாதை வியாபாரிகளின் கூவலும் மருந்து பாட்டில்களைப் பேரம் பேசும் நோயாளிகளின் முனகலுமாய் ஓர் உயிர்ப்பற்ற சந்தடி.

  ஆபிதாவால் அடிபெயர்க்கவே இயலவில்லை. ஏழு நாட்களுக்கு முன்பு வரை பூரிப்பிலும் பொலிவிலும் பொங்கி நின்ற அந்தத் தேகம், இப்போது கொத்தாக இளைத்திருந்தது. தாய்மையின் பூரணத்துவம் நிறைவாகக் குடிகொண்டு நின்ற வதனம், இப்போது மஞ்சள் பூத்து வெளிறிக் கிடந்தது. ஆர்வமும் ஆவலும் மின்னிய அந்த விழிகள் இப்போது வேதனையில் ஆழ்ந்து கிடந்தன. நெஞ்சின் வேதனையே நடையைத் தளர்த்தித் தள்ளாட வைத்திருக்கும்போது, தெம்பாக நடந்துவர எப்படி இயலும்/

  ஆஸ்பத்திரியின் எதிர்வாடையில்தான் பஸ் நிலையம். எப்படியாவது ஆபிதாவை அதுவரை நடத்திச் சென்றுவிட்டால் போதும். பொறையார் போகிற பஸ் அடிக்கடி உண்டு. பகல் சாப்பாட்டுக்கெல்லாம் வீடு போய்விடலாம். அங்கே வந்து நெஞ்சின் துயரங்களை அவள் எப்படித்தான் கொட்டினாலும் நான்கு சுவர்களுக்குள் முடிந்து போகிற ஒலியலைகள்தானே? பரவாயில்லை.

  சிமிண்டித் தரையில் அவளை அமர்த்தி வைத்துவிட்டு, “ஏதாவது சாப்பிடேன், ஆபிதா, இப்படி வெறும் வயிற்றோடு இருந்தால் எப்படி?” என அன்வர் பரிவை இழைத்து வினவியபோது, “வரும்போது வெறும் வயிற்றோடு வரவில்லையே. போகும்போதுதான் வெறும் கை” என்று விரக்தியாக ஆபிதா பேசியபோது, அந்த அர்த்தம் செறிந்த சொற்றொடருக்குப் பதில் கூற மொழி தெரியாமல் வாயடைத்துப் போனான் அன்வர்.

  இந்தப் பரந்த உலகத்தில், நாளுக்கு நாள், வினாடிக்கு வினாடி, எத்தனையோ ஜனனமும் எத்தனையோ மரணமும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. கால வசத்தால் நமக்கும் அப்படியோர் அசம்பாவிதம் ஏற்படும்போது நம்மால் தாங்கிக்கொள்ள முடிவதில்லைதான். அதுவும் புது வாழ்வின் நுழைவாயிலிலேயே அப்படியொரு சோகமான காவியம் எழுதப்பட்டுவிட்டால், ஆபிதாவைப் போன்ற பெண்களின் மென்மையான இதயங்களால் தாங்கிக்கொள்ள முடியாதுதான். அது அவளுக்குத் தெரிந்திருந்தும்கூட, அவள் எதிர்பார்த்து ஏங்கி நின்றது அதைத்தானா? இல்லையே, அது ஒரு கொடியில் முகையவிழ்க்கப்போகிற அரும்பைப் பற்றிய இனிமையான கற்பனை. அந்தக் கற்பனை அவர்களின் இல்லற ஏட்டில் கதையாகத்தான் எழுதப்பட்டு விட்டது. எழுதியவன், ஒரு சாதாரணக் கதாசிரியனா? இகபரம் இரண்டையும் இரு விரல்களால் இயக்குகிற அந்த ஏகனாயிற்றே.

  பொறையார் செல்லுகிற பஸ் வந்துவிட்டது. பஸ் நிலையத்தில் மந்த கதியில் இயங்கி நின்ற மனிதர்கள் அசுரத்தனமாய்ப் பாய்ந்து சென்று அதில் ஏற முயன்றபோது, “இரண்டே பேர், யாராவது ஒரு பெண்ணும் ஆம்பிளையும் வாங்க” என்று கத்தினார் கண்டக்டர்.

  அடுத்த விநாடியில் அன்வரையும் ஆபிதாவையும் சுமந்து கொண்டு நகர்ந்தது பஸ். பஸ்ஸுக்குள் இட நெருக்கடி மிதமாக இருந்த காரணத்தால் பெண்கள் சீட்டிலேயே ஆடவர்களும் அமர்த்தப்பட்டிருந்தனர். நல்ல வேளையாக அனைவரும் கணவன் மனைவிகள்தான். அவர்களினூடே அன்வரும் ஆபிதாவும் உட்கார்ந்தனர்.

  “டீட், டீட்” டிக்கட் என்கிற வார்த்தை ரொம்ப நீண்டதாகத் தெரிந்ததாலோ என்னவோ கண்டக்டர் சுருக்கி முழக்கியபடி பஸ்ஸை அலைந்துகொண்டிருந்தார். ஆபிதா முக்காட்டை இழுத்து மூடிக்கொண்டு, ஜன்னலுக்கு வெளியே நகர்ந்து விரைகிறவற்றில் பார்வையை நாட்டி அமர்ந்திருந்தாள். விழிகளில் தெரிகிற காட்சிக்கும் அவள் இதயத்தில் நடக்கிற போராட்டத்துக்கும் எள்ளளவும் சம்பந்தமிருக்காது என்கிறவரை அன்வருக்குத் தெரியும். Read the rest of this entry »

   

  Tags: , , , , , , ,