ஓவர்டோஸ் ஆபத்து, டாக்டர் மோடி…

1623720_871600872867490_4948435172618749563_nநோயாளிக்கு எது நல்லது என்று டாக்டருக்கு தெரியும்.

யார் நோயாளி என்பது டாக்டர் நரேந்திர மோடிக்கு தெரியும்.

பிரதமர் பதவி ஏற்ற பிறகு கோவாவில் பிஜேபி ஊழியர்கள் கூட்டத்திலும், பின்னர் நாடாளுமன்ற மண்டபத்தில் எம்.பி.க்கள் மத்தியிலும் பேசும்போது அது நமக்கு தெரிந்தது.

‘நாடு இன்று மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. பொருளாதாரம் சீர்குலைந்து கிடக்கிறது. இந்த நிலைமையை சீர் செய்ய வேண்டுமானால், சில கடுமையான நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும். அவை கசப்பான மாத்திரைகளாக இருக்கும். ஆனால் நோயை விரட்டி ஆரோக்யத்தை மீட்க அந்த கசப்பு மாதிரைகளை விழுங்கியே தீர வேண்டும்’ என்று மோடி சொன்னார்.

  • உடம்பு சரியானால் சரி என்று ஆவலுடன் காத்திருந்த இந்தியா, கசப்பு மருந்தை விழுங்க ஆவென்று வாயை திறந்தது. டாக்டர் சட்டென்று பாகற்காய், வேப்பங்காய் என்று வரிசையாக கசப்பு மாத்திரைகளை வாயில் போட்டு மூக்கை பொத்தி தண்ணீர் ஊற்றப் போகிறார் என்பது, பாவம் நோயாளிக்கு அப்போது தெரியாது.

    முதலில் கவர்னர்கள் நீக்கம். அடுத்தது சமூக ஊடகத்தில் இந்தி திணிப்பு. மூன்றாவது ரயில் கட்டண உயர்வு.

    ‘மோடிஜி கோ லானே வாலே ஹைன், அச்சே தின் ஆனே வாலே ஹைன்’ என்ற பாடலை கட்சியின் தேசிய கீதமாக்கி ஆட்சிக்கு வந்தவர் மோடி. ’அப் கி பார் மோடி சர்க்கார்’ என்ற கோஷத்தையும் சேர்த்து பார்க்க வேண்டும். ’மோடி வந்து விட்டார், நாட்டுக்கு நல்ல காலம் பிறந்து விட்டது’ என்று கொண்டாடினார்கள் தொண்டர்கள்.

    விவரம் அறிந்த தமிழர்கள் அமைதி காத்தார்கள். நல்லகாலம் பிறக்குது என்று வீட்டு வாசலுக்கு வந்து குடுகுடுப்பை அடித்து குறி சொல்லும் கோடங்கிகள் அவர்களுக்கு புதிதல்ல. எல்லாம் இந்தி மயமாக இருக்கிறதே என்று யோசித்தார்கள்.

    வாஜ்பாய் மிகப்பெரிய இந்தி பேச்சாளராகவும் அபிமானியாகவும் இருந்தபோதிலும், அவர் காலத்தில் தேர்தலை சந்தித்தபோது ’இண்டியா ஷைனிங்’ என்ற கோஷத்தை பிஜேபி முன்வைத்தது. எதார்த்த நிலைக்கு முரணான அந்த கோஷமே 2004 தேர்தலில் அந்த கட்சியின் வீழ்ச்சிக்கு காரணம் என பிற்பாடு சொல்லப்பட்டது. விஷயம் அதுவல்ல. பெரும் தலைவராக இருந்த போதிலும் பிரசாரத்தில் வாஜ்பாய் என்ற தனிநபர் முன் நிறுத்தப்படவில்லை. இன்னொன்று, இந்தி பேசும் மக்களின்கட்சியாக கருதப்பட்ட பிஜேபி அகில இந்தியாவுக்கும் பொதுவான மொழி ஆங்கிலம் என்பதை அங்கீகரிக்கும் பாணியில் அந்த மொழியில் தேர்தல் பிரசார மந்திரத்தை உருவாக்கியது.

    இந்த தேர்தலில் அமெரிக்க தேர்தல் ஸ்டைலை சுவீகரித்தது பிஜேபி. கட்சியை காட்டிலும் தனி மனிதரை முன் நிறுத்தி, அவரை மையப் புள்ளியாக்கி பிரசாரம் செய்யும் உத்தி அந்த நாட்டுக்கு சொந்தமானது. ஆனால், பிரசார கோஷங்கள், வாசகங்களை தயாரிப்பதில் முழுக்க முழுக்க இந்திக்கு முதல் மரியாதை வழங்கப்பட்டது. மோடி வழி தனி வழி என்பது இந்த வியூகத்தின் மூலம் நாட்டுக்கு பிரகடனம் செய்யப்பட்டது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கையாலாகா தனத்தால் ஆத்திரம் அடைந்திருந்த மக்களுக்கு அது கவர்ச்சியாகவே தெரிந்தது. வித்தியாசமான ஆட்சி தருவார் என்று அமோகமாக ஆதரவு அளித்தனர்.

    இவ்வளவு சீக்கிரம் ஏமாற்றம் தாக்கும் என்பதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

    கவர்னர்கள் மாற்றத்தை பார்ப்போம். அந்த பதவியே தேவையில்லை என்ற கருத்து பல காலமாக சொல்லப்படுகிறது. ஆட்டுக்கு தாடி எத்தனை அவசியமோ அது போன்றதுதான் கவர்னர் பதவி என்ற சிந்தனை தமிழ் மண்ணில் இருந்து பரவியதுதான். ஓரம் கட்டப்பட்ட அரசியல்வாதிகள், ஓய்வு பெற்ற அதிகாரிகள் ஆகியோரை குடியமர்த்தும் மறுவாழ்வு இல்லம்தான் ராஜ்பவன். மத்தியில் ஆட்சி அமைக்கும் கட்சியின் விருப்பத்துக்கு இணங்க செயல்படுவதுதான் கவர்னரின் கடமை என்பது எழுதப்படாத விதி. ஆகவே மத்தியில் ஆட்சி மாறும்போது கவர்னர்கள் மாற வேண்டும் என்பது ஆட்சேபிக்க முடியாத நியதி.

    விஸ்தாரமான மாளிகையில் ஆள் அம்பு சேனையுடன் மாநில ஆட்சியின் தலைவராக வசிக்கும் சுகபோக வாழ்க்கையை சுலபத்தில் கைவிட யாருக்கும் மனம் வராது. என்றாலும், அப்படி தயங்குபவர்களை எப்படி வெளியேற்றுவது என்பதில் ஒரு இங்கிதம் வேண்டும். உள்துறை செயலாளரை விட்டு போன் போட்டு, ‘உங்கள் ராஜினாமா கடிதத்தை நாளைக்குள் ஃபேக்ஸ் பண்ணுங்கள்’ என்று கட்டளை பிறப்பிக்க செய்வது கடைந்தெடுத்த அநாகரிகம். அமைச்சரே அழைத்து வேண்டுகோளாக சொல்லியிருக்கலாம். பதவிக்கான பணியும் பதவி வகிப்பவரின் லட்சணமும் எப்படி இருந்தாலும், கவர்னர் என்பது அரசியல் சாசனத்தின்படி கவுரவம் மிகுந்த பதவி. அந்த பதவியையே ஒழிக்க அரசியல் சாசன திருத்தம்கொண்டு வந்து நிறைவேற்றும் வரையில், அதற்கான மரியாதையை காப்பாற்ற வேண்டியது அரசின் பொறுப்பு. ராஜ்நாத் சிங் அதை உணரவில்லையா, அல்லது மோடியின் வழிகாட்டுதலில் நடந்த நாடகமா என்பது தெரியவில்லை.

    இந்தி மொழியை கட்டாயமாக பயன்படுத்த வேண்டும் என்று உயர் அதிகாரிகளுக்கு பிறப்பித்த உத்தரவு அடுத்த சொதப்பல்.
    தகவல் பரவுவதில் சமூக ஊடகங்களின் பங்களிப்பு பெருகி வரும் காலம் இது. அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் அவற்றை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுகின்றனர். அவர்கள் எந்த மொழியிலும் தகவல் பதிவு செய்ய இந்த ஊடகங்களில் வசதி இருக்கிறது. பிரதமர் மோடி தனக்கென தனி தளம் வைத்திருக்கிறார். ட்விட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் அக்கவுண்ட் வைத்து தன் கருத்துக்களை ஆங்கிலம், இந்தி மொழிகளில் பதிவிடுகிறார். காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர்களும் அவ்வாறு செய்கின்றனர். இந்த நிலையில் திடீரென அதிகாரிகள் இந்திக்கு முன்னுரிமை கொடுத்து பதிவுகள் இடுமாறு சுற்றறிக்கை அனுப்பி இருப்பது மென்மையாக சொன்னால் வேண்டாத வேலை.

    டெலிபோனில் ஒருவர் பேசுவது எந்த மொழியாக இருந்தாலும் அதை நீங்கள் விரும்பும் மொழியில் கேட்கவும், நீங்கள் உங்கள் மொழியில் அளிக்கும் பதிலை அவர் தனது மொழியில் கேட்டுக் கொள்வதற்கும் வசதி வந்துவிட்டது. சோதனை முறையில் வெற்றி அடைந்துள்ள இந்த தொழில்நுட்பம் விரைவில் பொது வழக்கில் வர இருக்கிறது. தகவல் தொடர்பில் இவ்வளவு புரட்சிகரமான முன்னேற்றம் ஏற்பட்டு, மொழிகளுக்கு இடையிலான தடுப்புகள் அடியோடு தகர்க்கப்படும் சூழலில் மத்திய அரசு இம்மாதிரி ஓர் உத்தரவை பிறப்பிக்க நினைத்ததே பிற்போக்கானது. கேலிக்குரியது. ஆபத்தானது.

    மத்திய அரசின் விளம்பரங்கள், அறிவிப்புகள், டெண்டர்கள் இந்தியா முழுவதும் பத்திரிகைகளில் பிரசுரம் ஆகின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் அதன் மொழியில் இவை வெளியாகின்றன. பாதியை சம்பந்தப்பட்ட துறையே தயாரிக்கின்றன. மீதி அந்தந்த பத்திரிகைகளால் மொழி மாற்றம் பெறுகின்றன. முழுவதுமே அரசு தரப்பில் தயாரித்து வழங்க கட்டமைப்பு வசதி இருக்கிறது. அதை இன்னும் பலப்படுத்த வழி இருக்கிறது. எனவே, இன்டர்நெட்டிலாவது மத்திய அரசின் ஒவ்வொரு அறிவிப்பையும் ஆணையையும் யார் எந்த மொழியில் விரும்புகிறாரோ அதில் பார்த்து படிக்க வழி செய்து கொடுப்பதுதான் முறை. அங்கீகரிக்கப்பட்ட ஆட்சிமொழிகள் 22 இருந்த போதிலும், அது ஒன்றும் கடினமான காரியம் அல்ல. அரசின் தகவல் பரிமாற்ற தொழில்நுட்பத்தில் அடுத்த கட்டம் அதுவாகத்தான் இருக்க வேண்டும்.

    மோடி சர்க்கார் சறுக்கிய அடுத்த விவகாரம் ரயில் கட்டண உயர்வு. 2012 மார்ச்சில் சரக்கு கட்டணத்தை ஐ.மு.கூ அரசு உயர்த்தியபோது மோடி கடுமையாக விமர்சனம் செய்தார். ‘ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், இவ்வாறு அவசரமாக அறிவிக்க என்ன அவசியம்? இது நாடாளுமன்றத்தை பைபாஸ் பண்ணுவதாக ஆகாதா?’ என்று மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதினார். அடுத்தவரிடம் சுட்டிக் காட்டிய தவறை அவரே செய்திருக்கிறார். உயர்வு தவிர்க்க முடியாத்தாக இருந்தால், ரயில்வே பட்ஜெட்டில் அதை விளக்கி, நாடாளுமன்றத்தில் விவாதித்து, அமைச்சர் பதில் அளித்து நிறைவேற்றி இருக்கலாம்.

    செய்வதையும் செய்து விட்டு அதற்கு இன்னொருவர் மேல் பழி போடுவது கேவலமான செயல். ‘இந்தி கட்டாயம் என்ற அறிக்கை முந்தைய அரசால் தயாரிக்கப்பட்டது. மோடி அரசுக்கு சம்பந்தமில்லை’ என சில அமைச்சர்கள் சப்பைக்கட்டு கட்டுகின்றனர். அப்படியானால் மோடி பதவி ஏற்ற பிறகு அந்த ஆணைகளை ஏன் வெளியிட வேண்டும்? ரத்து செய்திருக்கலாம் அல்லது அப்படியே கிடப்பில் போட்டிருக்கலாமே.

    இதே சப்பைக் கட்டுதான் ரயில் கட்டண உயர்வுக்கும். ’முந்தைய அரசு கட்டண உயர்வை அறிவித்து விட்டு, தேர்தலில் தோல்வி அடைந்ததும் அறிவிப்பை நிறுத்தி வைத்தது. அதைத்தான் இப்போது வெளியிட்டோம்’ என்கிறார்கள். மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பது புரிந்து முந்தைய அரசு நிறுத்தி வைத்த கட்டண உயர்வை, இந்த அரசு அப்படியே அமல்படுத்த துணிகிறது என்றால் என்ன அர்த்தம்?

    மாற்றம் வேண்டும் என்றுதான் மோடி கையில் அதிகாரத்தை கொடுத்துள்ளனர் மக்கள். பழைய ஆட்சியின் செயல்பாட்டு முறைகளையே அவரும் பின்பற்றினால் இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்ற முடிவுக்கு வந்து விடுவார்கள்.

    அமைச்சரவை குழுக்கள் அமைத்து பிரச்னைகளை விவாதிப்பதால் முடிவு எடுக்க தாமதம் ஏற்படுகிறது என்று கூறி, முந்தைய அரசு அமைத்த குழுக்களை ஒட்டு மொத்தமாக கலைத்தார் மோடி. ஒரே வாரத்தில் புதிதாக குழுக்களை உருவாக்கி இருக்கிறார். காரணம் தெரிவிக்கவில்லை. சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசம் பெரிதாகிக் கொண்டே போவது மோடி சர்க்காரின் இமேஜுக்கு நல்லது அல்ல.

    கசப்பு மருந்து வீரியம் உள்ளதாக இருந்தாலும், அடுத்தடுத்து கொடுத்தால் ஓவர்டோஸ் ஆகி நோயாளியின் உயிருக்கு ஆபத்தாக முடிந்துவிடும் என்பதை டாக்டர் மறந்துவிட கூடாது.

    (இழு தள்ளு 39/ கதிர்/ குமுதம் ரிப்போர்ட்டர் 29.06.2014)
    kathirkathirvaelKathir Vel
    நன்றி கட்டுரை தந்த திரு.கதிர்வேல் அய்யா அவர்களுக்கு