RSS

Monthly Archives: March 2012

இதுதான் இந்த நாட்டாமையோட தீர்ப்பு!

கோழி மோசடி

புளி போட்டு பளபளப்பாக துலக்கி வைக்கப்பட்டிருந்த வெங்கலச் சொம்பில் ‘புளிச்’சென்று துப்பினார் நாட்டாமை. அதே ஆலமரம். அதே ஜமுக்காளம். அதே பொதுமக்கள்.

“ஆளாளுக்கு மசமசன்னு நின்னுக்கிட்டிருந்தா எப்பூடி? யாராவது பேச்சைத் தொடங்கியாகணுமில்லே?” நாட்டாமைக்கு சரிசமமாக அமர்ந்திருந்த பச்சைத்துண்டு பெருசு ஆரம்பித்து வைத்தது. தனக்கு வாகாக அவ்வப்போது ‘பீப்பி’ ஊதும் இம்மாதிரி ஆட்களுக்குதான் சரியாசனம் வழங்குவது நாட்டாமையின் வழக்கம்.

“நம்ம மாடசாமிதான் பிராது கொடுத்திருக்காப்புலே” மேடையில் அமர்ந்திருந்த இன்னொரு பீப்பி, முந்தைய பீப்பியை வழிமொழிந்தது.

“அது ஒண்ணுமில்லேங்கய்யா… நம்ம ராசாவாலே எனக்கு ஒரு ஒண்ணே முக்கா லட்சம் நஷ்டமா போயிடிச்சிய்யா… அவனாண்ட பேசி வாங்கித் தருவியளோ, இல்லேன்னா கட்டிவெச்சி அடிச்சி வாங்கித் தருவியளோ தெரியாது. என் காசு ஒண்ணே முக்கா லட்ச ரூவாய் எனக்கு வோணும்”

“என்னப்பா ராசா. மாடசாமி சொல்றது உண்மையா?”

“இல்லீங்க. என்னாலே அவனுக்கு லாபம்தானுங்க”

“ஏம்பா. அவன் லாபம்னு சொல்றான். நீ நஷ்டமுன்னு சொல்றே. என்னதான்யா உங்க கொடுக்க வாங்க”

“அய்யா. என் கோழிப்பண்ணையையே அழிச்சிப் புட்டான்யா இந்த ராசா”

“இல்லீங்கய்யா. அவன் பொய் சொல்லுதான். என்னாலே மாடசாமிக்கு நாப்பது ரூவாய் லாபம்தானுங்கய்யா”

“யோவ். ரெண்டு பேருலே ஒருத்தனாவது புரியறாமாதிரி சொல்லித் தொலைங்கடா. வெயில் ஏறிக்கிட்டே போவுது. உடம்பெல்லாம் ஒரு மாதிரி கசகசக்குது பார்த்துக்க”

மாடசாமி சொல்ல ஆரம்பித்தான்.

“அய்யாவுக்கு தெரியாதது ஒண்ணுமில்லீங்க. நான் ஆசையா ஒரு பெட்டைக்கோழியை வளர்த்து வந்தேன். எனக்கு வயித்துக்கு இருக்குதோ இல்லையோ. அதுக்கு நல்லா சத்தா தீவனம் போட்டு வளர்த்தேனுங்க. இப்போ கொஞ்சம் பணமுடை. அதனாலே அதை விலைக்கு வித்துடலாமுன்னு முடிவு பண்ணேனுங்க. நம்ம ராசா வாராவாரம் சந்தைக்குப் போவாப்புலேன்னு சொல்லிட்டு, அவனாண்ட இதை வித்துக் கொடுக்குற பொறுப்பை ஒப்படைச்சேனுங்க. அதுலேதானுங்க என்னை இவன் ஏமாத்திப்புட்டான்”

“அந்த கோழியோட விலை நூத்தி பத்து ரூவாய்ங்க. நான் நூத்தி ஐம்பது ரூவாய்க்கு வித்துக் கொடுத்தேனுங்க. அவனுக்கு நாப்பது ரூவாய் லாபம்தானுங்களே?”

“அது எப்படிங்க அய்யா? இந்த கோழி நாலு முட்டை வெச்சுருக்கும். நாலு குஞ்சு பொறிச்சிருக்கும். நாலு பதினாறாயி, பதினாறு அறுவத்தி நாலு ஆயி, அறுவத்தி நாலு இருநூத்தி ஐம்பத்தாறாயி… இப்படியே ஒரு ரெண்டு வருஷத்துலே பண்ணை ஆகியிருக்குமுங்க.. ஊர்லே பண்ணை வெச்சிருக்கிறானே முனுசாமி. அவங்கிட்டே வெசாரிச்சி கேட்டுட்டுதானுங்க சொல்றேன். ஒரு பண்ணையோட மதிப்பு ஒண்ணே முக்கா லட்சமுங்க. அப்போ என் கோழியோட மதிப்பும் அதுதானுங்களே? இவன் பாட்டுக்கு நூத்தி ஐம்பது ரூவாயை கையில் கொடுத்துட்டு போனா என்னாங்க அர்த்தம்?”

“என் அறிவுக்கண்ணை தெறந்துட்டேய்யா..” நாட்டாமை புளங்காங்கிதப்பட்டதோடு ராசாவை நோக்கி, “ராசா நீ கோழியை யாராண்ட வித்தியோ, அந்த விற்பனையை கேன்சல் பண்ணி உடனே தீர்ப்பு கொடுக்கறேன். மரியாதையா கோழியை வாங்கி மாடசாமி கிட்டே கொடுத்துடு. அதுவுமில்லாமே ஒண்ணே முக்கா லட்ச ரூவாய் ஏமாத்தியிருக்கே. இந்த நாட்டாமையோட லெவலை தாண்டின குத்தமிது. மோசடி பண்ண குத்தத்துக்காக உன்னை இந்த பஞ்சாயத்து போலிஸிலே ஒப்படைக்குது. இதுதான் இந்த நாட்டாமையோட தீர்ப்பு!”

“அருமையான தீர்ப்புங்கய்யா…” ஊரே குலவையிட்டு நாட்டாமையை வாழ்த்தியது.

ராசா இப்போது ஜெயிலில் இருக்கிறார். மாடசாமி தன் கோழியை ஒண்ணே முக்கா லட்ச ரூபாய்க்கு விற்க ஆள் தேடிக் கொண்டிருக்கிறார்.
எழுதியவர் யுவகிருஷ்ணா

Source : http://www.luckylookonline.com/2012/03/blog-post.html

Advertisements
 

Tags: ,

மார்க்கத்தின் குருவானவர் எப்படி இருக்க வேண்டும்? – திருமந்திரம்

குரு என்பவர் மட்டுமே இறை உபதேசம் பண்ண இயலும். குரு இறைநிலையை உணர்ந்தால் மட்டுமே தன்னுடைய சிஷ்யனுக்கு உண்மையை உபதேசிக்க இயலும். அதனால் தான் திருமூலர்:

குருட்டினை நீக்குங் குருவினைக் கொள்வார்

குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார்

குருடுங் குருடுங் குருட்டாட்டம் ஆடிக்

குருடுங் குருடுங் குழிவிழுமாறே – 1680 , திருமந்திரம்

வேடதாரிகளை விட்டுவிடுங்கள் அவர்கள் குருட்டு வழியினர். குருடனுக்கு குருடன் வழி காட்டினால் இருவரும் வீழ்ந்து அழிவர்.” என்கிறார் திருமூலர்.

கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்ளுக

உள்ள பொருளுடல் ஆவியுடன் ஈக

எள்ளத் தனையும் இடைவிடாதே நின்று

தெள்ளி யறியச் சிவபதந்தானே.

1693 : -திருமந்திரம் 6ம் தந்திரம்

 • விளக்கம்:

  குருவாக ஒருவனை அவசரப்பட்டுத் தேர்ந்தெடுக்கலாகாது. மிக நன்றாக யோசித்துத் தெளிந்த பின்னரே ஒருவனைக் குருவாகக் அடைதல் வேண்டும். அப்படிப் பெறப்படும் குருவானவன் நல்லவனாய், நாம் அறியாதவற்றை அறிந்தவனாய், நமக்கு அவற்றை எடுத்துச் சொல்பவனாய், நம்மை நன்னெறிப்படுத்துவனாய், குற்றமில்லாதவனாய், நமக்குப் பிறவிப் பயன் கொடுப்பவனாய் அமைதல் வேண்டும்.

  திருமந்திரத்தின் இந்த இரண்டு பாடல்களும் முகமது நபிக்குப் பொருந்தி வருவதை எண்ணி வியக்கிறோம். ஒரு இறைத்தூதர் எப்படி இருக்க வேண்டும். எப்படி வாழ வேண்டும். என்ன விஷேச சக்திகளை பெற்றிருக்க வேண்டும் என்று திரு மூலர் அழகாக இந்த பாடலில் வர்ணிக்கிறார். நமது தமிழ் மொழிக்கு வந்த இறைத் தூதரின் இலக்கணங்கள் இவ்வாறுதான் இருக்க வேண்டும் என்று தமிழில் இறங்கிய இறை வேதம் பட்டியலிட்டிருக்கலாம். அதையே திரு மூலர் தனது பாடலில் எடுத்தாண்டிருக்கிறார் என்று நான் எண்ணுகிறேன்.

  ———————————————————–

  முகமது நபி அவர்களுக்கு ஆடு ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அப்பொழுது உணவுகள் குறைவாக இருந்த காலம். தமது குடும்பத்தாரிடம் ‘இந்த ஆட்டை சமையுங்கள்’ என்று கூறினார்கள். பெரிய பாத்திரம் ஒன்று இருந்தது. அதில் அந்த உணவு வைக்கப்பட்டு கொண்டு வரப்பட்டது. உணவு கிடைக்காத தோழர்கள் எல்லாம் அழைக்கப்பட்டனர். முகமது நபி அவர்களும் அவர்களுடன் அமர்ந்து கொண்டனர். உணவுத் தட்டைச் சுற்றி அனைவரும் அமர்ந்து சாப்பிடலானார்கள். கூட்டம் அதிகமாக இருந்ததால் முகமது நபி அவர்கள் மண்டியிட்டு அமர்ந்து மற்றவர்களுக்கு இடம் கொடுத்தார்கள். அப்போது ஒரு கிராமவாசி ‘என்ன இப்படி உட்கார்ந்திருக்கிறீர்கள்?’ என்று கேட்டார். அதற்கு நபி அவர்கள் ‘இறைவன் என்னை அடக்கு முறை செய்பவனாகவும் மமதை பிடித்தவனாகவும் ஆக்கவில்லை. பெருந்தன்மை மிக்க அடியானாகவே ஆக்கியுள்ளான்.’ என்று விடையளித்தார்.

  -ஆதாரம் -அபுதாவுத் 3773, பைஹகீ 14430

  பலரும் அமர்ந்து சாப்பிடும் ஒரு தட்டில் மேல் நிலையில் உள்ளவர்கள் ஒன்றாக சாப்பிடுவதை கவுரவக் குறைவாகவே கருதுவார்கள். மேலும் அன்றைய சமூக அமைப்பில் மண்டியிட்டு அமர்வது தாழ்த்தப்பட்டவர்களுக்கான பழக்கமாக இருந்தது. இதனால்தான் அந்த கிராமவாசி கூட அமர்ந்ததை குறை காண்கிறார். தாம் ஒரு ஆட்சியாளர் என்றோ மதத்தின் தலைவர் என்றோ, வீட்டின் உரிமையாளர் என்றோ முகமது நபி அவர்கள் நினைக்கவில்லை. மற்றவர்களைப் போல் பசித்திருக்க்க் கூடிய ஒரு மனிதனாக மட்டும் தான் தம்மை முன்னிறுத்துகிறார்கள். இப்படி ஒரு பண்பான ஆட்சியாளரை நாம் பார்த்திருக்கிறோமா?

  ஒரு மனிதர் முதன் முதலாக முகமது நபி அவர்களைச் சந்திக்க வருகிறார். பொதுவாக மன்னர்கள் முன்னிலையில் உடலை வளைத்து பவ்யமாக குடி மக்கள் நிற்பதுதான் அன்றைய வழக்கம. முகமது நபியையும் அதுபோல் நினைத்துக் கொண்டு உடல் நடுங்கி பய பக்தியுடன் வந்தார். ‘சாதாரணமாக இருப்பீராக! உலர்ந்த இறைச்சியைச் சாப்பிட்டு வந்த குறைஷிக் குலத்துப் பெண்ணுடைய மகன்தான் நான்.’ என்று கூறி அவரை சகஜ நிலைககு கொண்டு வந்தார்கள்.

  -நூல் இப்னுமாஜா 3303.

  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நமது தமிழ்நாட்டு முதல்வர் மேடையில் பேசும் போது மற்ற அமைச்சர்கள் நின்று கொண்டிருப்பதை பார்க்கிறோம். முதல்வரின் கால்களில் விழுவதையும் பார்க்கிறோம். அதுவும் இந்த இருபதாம் நூற்றாண்டில். ஆனால் முகமது நபியோ ஒரு மன்னர். அதிலும் மதத் தலைவர் தனது குடிமக்களிடம் எவ்வளவு அன்யோன்யமாக பழகியிருக்கிறார்கள் என்பதை இந்த சம்பவம் விளக்குகிறது.

  தரையில் எதுவும் விரிக்காமல் அமர்வார்கள். தரையில் அமர்ந்து சாப்பிடுவார்கள். ஆட்டில் தாமே பால் கறப்பார்கள். அடிமைகள் அளிக்கும் விருந்தையும் ஏற்பார்கள்.

  -தப்ரானி 12494

  அகழ் யுத்தத்தின் போது முகமது நபி அவர்களும் மக்களுடன் சேர்ந்து அகழ் வெட்டினார்கள். மண் சுமந்தார்கள். முகமது நபி அவர்களின் வயிற்றை மண் மறைத்தது.

  -புகாரி 2837, 3034,4101

  முகமது நபி அவர்கள் மதினா வந்தவுடன் பள்ளிவாசலைக் கட்டிய போது அவர்களும் மக்களோடு சேர்ந்து கல் சுமந்தார்கள்.

  -புகாரி 3906

  இப்படி எந்த வேலையிலும் பின் வாங்காமல் மக்களோடு மக்களாக ஒன்றரக் கலந்திருந்ததுதான் முகமது நபி அவர்களின் வாழ்க்கையாக இருந்தது. எனவே இன்று வரை அவரது புகழ் மேலும் மேலும் எட்டுத் திக்கும் பரவிக் கொண்டிருக்கிறது. ஒரு இறைத்தூதர், ஒரு குரு எவ்வாறு தனது மக்களுக்கு இருக்க வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணமாக முகமது நபி அவர்கள் திகழ்ந்து வருகிறார.
  Source :
  http://suvanappiriyan.blogspot.in/2012/03/blog-post_25.html

   
 • Tags: ,

  கொசுக்கள்

  கொசுக்களுக்குப் பயந்து
  சாயங்காலம் முளைக்கும் முன்னே
  மூடிக் கொள்கின்றன
  சன்னல்களும் கதவுகளும்.

  மின்சாரத்தில்
  கால் பதித்து நிற்கிறது
  மின் கொசு விரட்டி.

  ஊழலுக்குப் பழக்கப்பட்ட
  அரசியல் வாதி போல
  துணிந்து பறக்கின்றன
  கொசுக்கள்.

  இழுத்துக் கட்டிய வலைக்குள்ளும்
  நுழைந்து விடுகின்றன
  கொலைகாரக் கொசுக்கள்.

  கொசுக்கடியை
  மூலதனமாகக் கொண்டே
  சூடு பிடிக்கிறது
  வியாபாரம்.

  அடித்தலும் திருத்தலும்
  தாண்டியும்
  சுவரில் நசுக்கப்பட்டும்
  திருந்த மறுத்து
  வலிய வலிய
  வலம் வருகின்றன
  தலைமுறை தலைமுறையாய்
  வாரிசுக் கொசுக்கள்.

  கவிதை தந்தவர் சேவியர்,
  Source : http://xavi.wordpress.com/2011/02/24/kosu-2/#comment-8257

   

  Tags:

  திரை அரங்கிற்கு சென்று படம் பார்த்து ரசித்த காலங்கள்!

  இளவயதில் திரை அரங்கிற்கு சென்று படம் பார்த்து ரசித்த காலங்கள் அதிகம் . அது சின்ன திரை வந்த பின்பு குறைந்து விட்டது. உடல் நலம் குன்றிய சில நேரங்களில் மருத்துவரிடம் ஆலோசனை கேட்கச் சென்றேன் .அவர் எனது நண்பர் அவர் சொன்னார் “உன் உடம்பில் ஒரு நோயும் இல்லை ஆனால் மனக் குழப்பமாக உடல் நலம் குன்றியுள்ளதாக நீயே கற்பனை செய்துக் கொள்கின்றாய்” என்று சொல்லி விட்டு “தியேட்டரில் சென்று படம் பார்” என்றார். உடனே “நான் வீட்டில் பட கேசட் போட்டு பார்த்துக் கொள்கின்றேன்” என்று பதில் சொன்னேன். “நீ தனியாக படம் பார்த்தால் உன்னை நீ மறக்க மாட்டாய் அதனால் மக்களோடு மக்களாய் சிரித்து பார்த்து ரசித்து வா அதன் அருமை உனக்கு அறிய வரும்” என்று சொல்லிவிட்டு நடந்த கதையும் ஒன்றையும் சொல்லிக் காட்டினார் .
  ஒருவர் என்னிடன் நீண்ட நாட்களாக வைத்தியம் பார்த்தார் ஆனால் எந்த பயனும் தெரியவில்லை. அவரிடம் நான் உங்களுக்கு நாட்கள் நெருங்கிவிட்டது .இறைவனிடம் பிரார்த்திக் கொள்ளுங்கள் அத்துடன் செய்ய வேண்டிய கடமைகள் இருந்தால் முடித்து விடுங்கள் என்றும் சொல்லி அனுப்பினேன். அந்த முதியவர் பல நாட்கள் என்னிடம் வந்தார் அவர் உடலில் நல்ல மாற்றமும் ஆரோக்கியமும் கண்டு வியப்புடன் எந்த மருந்து சாப்பிட்டு உடலைத் தேற்றினீர்கள் எந்த மருத்துவரிடம் காண்பித்தீர்கள்” எனக் கேட்டேன் என்று அவர் நடந்த நிகழ்வினை விளக்கமாகச் சொன்னார்.

 • “நான் உங்களைப் பார்த்துவிட்டு கவலையோடு வீட்டிற்கு சென்ற போது வீட்டிலுள்ள அனைவரும் படம் பார்த்துக் கொண்டு சிரித்துக் கொண்டு மகிழ்வாக இருந்தார்கள். என் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவர்கள் மீது எனக்கு கோபம் வரச் செய்தது. நானும் அப்படியே அந்த படத்தை பார்க்க என்னிலை மறந்து அவர்களோடு அப்படத்தைப் பார்த்தேன். அவர்கள் பார்த்துக் கொண்டிருந்த படம் லாரல் ஹார்டி நடித்த படம்.நானும் அதனைப் பார்க்க மனதிற்கு சிறிது தெம்பு வந்ததுபோல் உணர்ந்தேன் . அதன் பிறகு திரை அரங்கிற்கு சென்று பல ஹாஸ்ய படம் பார்ப்பதில் ஈடுபடுத்திக் கொண்டு மக்களோடு மக்களாய் மகிழ்வில் மூழ்கினேன். அதுவே எனது உடல் நலத்திற்கு முக்கிய காரணமாய் அமைத்து விட்டது என்றார்”
  அதனையே நீயும் செய்து வா என்று அறிவுரைக் கூறினார்.

  எந்த நிலையிலும் மனதில் கவலை வராமல் பார்த்துக் கொள்வதும் மகிழ்வுடன் வாழ்வதனையும் பழகிக் கொள்ளவேண்டும்.

  தன்பிள்ளைகளை நேசிக்கும் எல்லாப் பெற்றோருக்கும் இப்படம் நன்றாக உள்ளது திரை அரங்கிற்கு சென்று அந்தப் படம் பார்த்து வா என்று சொல்வது இளைஞர்களைப் பொருத்தவரை, அவர்களுக்கு இப்படியெல்லாம் சொல்வது நாமே அவர்களை படுகுழியில் விழக் காரணமாகி விடுவோமோ! என்ற பயமும் உண்டாகின்றது.

   
 • Tags: , ,

  தேர்வில் வெல்ல தேவையானவைகள்

  தேர்வில் வெல்ல தேவையானவைகள்

  திரும்பத் திரும்பப் படியுங்கள் தெளிவு

  வரும்வரை படித்தவை உள்ளத்தில் பதியும்

  தேர்வுக்கு முதல்நாளும் தேர்வின் அன்றும்

  ஆர்வமுடன் மீள்பார்வை அவசியம் வேண்டும்

  சாய்ந்தும் பக்கமாய்ச் சரிந்தும் படித்தால்

  மாய்ந்து படித்தும் மூளையில் படியாது

  ;

  உண்ண வேண்டிய உணவு காய்கனி

  திண்ணமாய்க் கிட்டும் தேர்வில் வெற்றிக்கனி

  குளிக்கு முன்பு குளிர்நீரை வாய்க்குள்

  ஒளித்துக் கொண்டால் உற்சாகம் வாய்க்கும்

  முழுதாய் முன்னுறக்கம் மூளைக்கு ஓய்வு

  பழுதிலாத் தெம்பாம் படித்தவர் ஆய்வு

  எழுதிப் பார்த்தால் எட்டும் அளவு

  வழுத்திச் சொல்வர் வென்றோர் பலரும்

  தொடர்ந்து படித்தால் தொடங்கும் சோர்வு

  இடையில் வேண்டும் இனிய ஓய்வு;

  நடந்தத் தேர்வை நினைவில் அழித்தால்

  நடக்கும் தேர்வில் நலமே செழிக்கும்

  கடந்ததை எண்ணினால் காலமே வீணாகும்

  நடப்பதை எண்ணினால் நாளை உனதாகும்

  தொழுகை தியானம் தருமே புத்துணர்வு

  அழகிய உடற்பயிற்சி அஃதென உணர்க!

  ஆக்கம்: அபுல்கலாம்(த/பெ. ஷைக் அப்துல் காதிர்)

  (”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம் (பாடசாலை)
  அபுதபி (தொழிற்சாலை)

  http://www.kalaamkathir.blogspot.com

   

  Tags: