அழைத்தேன் ஒருதரம் அழைத்தேன் இரண்டுதரம் அழைத்தேன் மூன்றுதரம்


தோழியை அழைத்தேன்….

இந்த வேற்றுக்கிரகவாசியைக்
கட்டிக்கொண்டு நான் படும்பாடு
அப்பப்பா
எரிச்சலில் என் இதயத்தையே
இடியாப்ப இழைகளாய்ப்
பிழிந்துகொண்டிருக்கிறேன்
பிறகு பேசலாமா என்றாள்

*

நண்பனை அழைத்தேன்…

விமான நிலையம் வந்திறங்கினேன்
இடி என் நடுத்தலையில்
சன்னமாய் இறங்கியது

எங்கள் சுண்டுவிரல்களிலிருந்து
வெட்டிப்போட்ட நகங்கள் கூட
குதித்துக் குதித்துச்
சண்டைபோட்டுக்கொள்கின்றன
அப்புறம் பேசலாமா நண்பா
என்றான்

*
தொப்புள் கொடியால்
பிரித்தெடுக்கப்படாத
ஆனால் தாய்ப்பால் அருந்திய
பாசத்தைத் தரும் உறவான
என் அம்மாவை அழைத்தேன்

எங்கள் குடும்பத்தில்
எரிமலை வெடித்து
தீக்குழம்பு
கொட்டிக் கொண்டிருக்கிறது

பல மாதங்களாய்ச் சூடேறியது
இன்று வீடேறிவிட்டது

பேசும் சூழலில்லை மகனே
எதுவும் பிடிக்கவில்லை மன்னித்துவிடு

வீடு சீரானால்
நானும் உயிருடன் இருந்தால்
நானே அழைப்பேன்
அதுவரை
வேண்டாம் உன் தொலைபேசி
என்றார் பயத்தோடும் பாசத்தோடும்

*
எங்கு போனாலும்
இதுதானா?

என்னிடமும்
அந்த எழவெடுத்த
நெருப்புச் சுனாமி என்றுதானே
தொடர்ந்து
ஒவ்வொருவராய் அழைத்தேன்

விட்டைவிட்டு
வெளியேற….

என் துக்கம் தாண்டி
ஒரு துயரத்தில் குதிக்க…

வாடகைக்கு நிலவறை தேடி
அலைந்துகொண்டிருக்கிறேன்
என் ”ஒரே படகில் பயணப்படும்”
உறவுகளே

இது என்ன
விதி?

மண்ணில்
மனித வாழ்க்கைபோல்
ஒரு கேடுகெட்ட நரகம்
விண்ணில் இருக்கிறதா என்ன?

ச்சும்மா
பூச்சாண்டி காட்டுகிறார்கள்
செத்தப் பேய்களிடம்

சிரிப்புச் சிரிப்பாய் வருகிறது
எனக்கு

உங்களுக்கு???
Source: http://anbudanbuhari.blogspot.in/2012/04/blog-post_26.html

Author: S.E.A.Mohamed Ali. "nidurali"

S.E.A.Mohamed Ali (Jinnah)B.A.,B.L., (nidurali) Nidur. Indeed all the praises are due to Allah, we praise him and we seek his assistance and forgiveness, and we seek refuge in Allah. https://aboutme.google.com/?referer=gplus

Leave a comment