குளிரூட்டப்பட்ட செல்போன் கடைகளும்,புழுக்கம் மிகுந்த தொழிற்சாலை வளாகங்களும்..!!

-நிஷா மன்சூர்

ஒருமுறை கரூர் வழியே திருச்சி செல்லும்போது மதியவேளையில் ஒரு பள்ளியில் தொழுதேன்.அன்றைக்கு வீட்டில் சாப்பாடு கொடுத்துவிட்டிருந்தார்கள்.
பள்ளியின் ஒரு பகுதியில் இருவர் சாப்பிட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்ததும் வழியில் எங்கோ மரத்தடியில் சாப்பிடுவதைவிட இங்கு சாப்பிடலாமே என்று எண்ணி சாப்பாட்டுக்கூடையை எடுத்து வரச்சொல்லி அவர்களுடன் இணைந்து கொண்டேன்.

அந்த இருவரில் ஒருவர் லெமன் சாதம் கொண்டுவந்திருக்க இன்னொரு இளம்பையனோ காலையில் சுட்ட தோசைகளைக் கொண்டுவந்திருந்தார்.அது டிபன்பாக்சில் ஊறிப்போய் சொதசொதவென்று ஆகிவிட்டிருந்தது.இதுபோன்ற தோசைகளை கண்ணீரோடு விழுங்கிய அனுபவம் எனக்கும் உண்டென்பதால் நான் கொண்டுவந்திருந்த சூடான சோற்றையும் முட்டைகளையும் அவர்களுக்கு அளித்துவிட்டு இரண்டு சப்பாத்தியுடன் ஊறிய தோசை ஒன்றையும் சாப்பிட்டு என் மதிய உணவை நிறைவுசெய்து கொண்டேன்.

  • அந்த தோசை கொண்டுவந்த பையனை விசாரித்தபோது அப்பா இல்லாத,நோயாளியான அம்மாவுடன் வாழ்கிற,ஒரு சகோதரனைப் படிக்கவைக்க உழைக்கிற எளிய பையன் என்று தெரிய வந்தது.இங்கு வேலை பார்ப்பது ஒரு மொபைல் கடையில் என்றும் பஸ் மற்றும் செலவுகள் போக மாதம் ஐந்தாயிரம் ரூபாய் மட்டுமே மிஞ்சுமென்பதும் உபரி தகவல்.

    “உனக்கு நல்ல கண்ணியமான வேலை.வீட்டுக்கு அனுப்ப மாதம் ஏழாயிரம் ரூபாய் சம்பளம்.உணவு இருப்பிடம் பயணச்செலவு முற்றிலும் கம்பனி பார்த்துக்கொள்ளும்,இது ஆரம்பத்தில்தான்.போகப்போக உன் திறமைக்கேற்ப சம்பாதிக்கலாம் என்ன சொல்ற,
    வர்ரியா என்கிட்ட வேலைக்கு..? என்றேன்.

    இனம்புரியாத உணர்ச்சிகளுடன் சார்,குவாலிஃபிகேசன்..?? என்றவனிடம் செய்யற வேலைல முழுகவனமும் ஆர்வமும் துடிப்பும்தான் தகுதி.உனக்கு அந்த தகுதி இருக்கா இல்லையா என்றேன்.
    உடன் சம்மதித்தவன் எப்போது வர,எங்கு வர என்று விசாரித்து தெரிந்து கொண்டான்.

    ஓரிரு தினங்களுக்குப்பின் போனில் தொடர்பு கொண்டு பேசி சம்பளம்,வேலைக்கான உத்தரவாதம் என்றெல்லாம் கேட்டுத் தெரிந்து ஒரு சுபயோக சுபதினத்தில் வந்து பணியில் இணைந்தார்.ஒரு அரைமணி நேரம் கிளாஸ் எடுத்துவிட்டு இன்றைக்கு ஒருநாள் அடிப்படை விஷயங்கள்/ப்ராடக்ட் பத்தின விபரங்கள் தெரிந்துகொள்ளச் சொல்லியும் நாளைமுதல் மார்கெட்டிங் ட்ரைனிங் வழங்கப்படுமென்றும் கூறி டெஸ்பாட்ச் செக்சனுக்கு அனுப்பினேன்.

    இரவு டெஸ்பாட்ச் செக்சனின் வேலைநேரம் முடிந்தபின் அட்மினை அழைத்து,
    “அந்த புது பையன் தங்கறதுக்கு ஏற்பாடு பண்ணிட்டீங்களா,
    மெஸ் அரேஞ்ச் பண்ணியாச்சா”என்று கேட்கையில் அட்மின் சொன்னார்,
    “சார்,
    அந்த பையன் டவுட்தான் சார்.தங்கலையாமா..ஊருக்குப்போய்ட்டு அடுத்த வாரம் வர்ரேன்னு சொல்றான்,உங்க ரூமுக்கு அனுப்பி வைக்கறேன் சார்.நீங்க பேசிப்பாருங்க”என்றார்.

    வந்த பையனிடம் ஏம்மா என்ன விஷயம் என்று கேட்டபோது,
    சார் கோவிச்சுக்காதீங்க சார் ரொம்ப சாரிங்க சார்.எனக்கு இந்த கிளைமேட் ஒத்துக்கலை சார்.பயங்கர ஹாட்டா இருக்கு.மதியம் சாப்பிட்ட மெஸ் சாப்பாடு வேற ஒத்துக்கலை,வயிறு ஒரு மாதிரியா இருக்கு.நாளைல இருந்து ஹோட்டல் சாப்பாடு வேற,ஒத்துக்குமா என்னன்னு தெரியல. அம்மாட்ட சொன்னேன் சார்.”ஊர்ஊராச்சுத்தி ஹோட்டல் சாப்பாடு சாப்புட்டா உடம்புக்கு ஒத்துக்காதுய்யா.நீ இங்கயே செல்போன் கடைல குளுகுளுன்னு வேலை பாத்துக்கோ.நீ கொடுக்கற சம்பளத்த வெச்சு சிக்கனமா குடும்பம் நடத்திக்கலாம்னு” சொல்லிட்டாங்க சார்.அதான்……..
    சாரி சார்,தப்பா நெனச்சுக்காதீங்க என்றான்.

    அட்மினை அழைத்து” பஸ் செலவுக்கு காசக்கொடுத்து அனுப்பி விடுங்க சார் இந்த கெணத்துத் தவளைய” என்றேன்..!!

    #காலைல சுட்ட ஊறிப்போன தோசைய உலகத்தையே குறைசொல்லிட்டு சுய இரக்கத்தோடு சாப்பிட்டு காலந்தள்றதுதான் உன் விதின்னு இருக்கும்போது அதை யாருப்பா மாத்த முடியும்னு தோன்றினாலும் உழைக்கத் தயாரில்லாத ஒரு சோம்பேறி இளம் சமூகம் உருவாகிக் கொண்டிருப்பது உண்மையிலேயே பெரும் துயரத்தை அளித்தது…
    10171721_443810355762887_237471937607906529_nநிஷா மன்சூர்

    Author: S.E.A.Mohamed Ali. "nidurali"

    S.E.A.Mohamed Ali (Jinnah)B.A.,B.L., (nidurali) Nidur. Indeed all the praises are due to Allah, we praise him and we seek his assistance and forgiveness, and we seek refuge in Allah. https://aboutme.google.com/?referer=gplus

  • Leave a comment